சிங்கப்பூரில் கார் வாடகை மோசடியில் ஈடுபட்டு பலரை ஏமாற்றிய ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூன் யூன் சுவான் என்ற அந்த 50 வயது ஆடவர் கொரோசல் தளம் மூலமாக மோசடியில் ஈடுபட்டார். இதனால் வாடிக்கையாளர்கள் 176,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.
மோசடி நடவடிக்கை 2023ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2025ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.
கார் வாடகைக்கு வழங்கி சொந்தத் தொழில் செய்து வந்த சூன் பிற நிறுவனங்களிடமிருந்து கார்களை முதலில் வாடகைக்கு எடுத்தார்.
பின்னர் வாடகைக்கு எடுத்த கார்களைத் தனது சொந்தக் கார்களைப் போலக் காட்டி கொரோசல் தளம் மூலமாகப் பிறருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த மோசடித் திட்டம் சிறிது காலம் தொடர்ந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குக் கிடைத்த கார்கள் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்பதை அறியாமல் இருந்தனர்.
இந்தச் சட்டவிரோதச் செயல் சூனுக்கு முதலில் லாபத்தைக் கொடுத்தாலும் பின்னர் நட்டத்தை ஏற்படுத்தியது.
நிறுவனங்களுக்கு வாடகை தராமலும் தனக்கு வாடகையாக வந்த பணத்தையும் சூன் செலவு செய்யத் தொடங்கினார்.
தனது வாடிக்கையாளர்களிடம் முன்பணமாகவும் பெரும் தொகையைச் சூன் வாங்கியுள்ளார். இறுதியில் அவரது மோசடி வேலை வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பிறகு அவர்மீது புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் இழந்த பணத்தை மீட்க முடியாமல் பெரிய அளவில் தவித்து வருகின்றனர்.
