எஸ்ஜிகார்மார்ட் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்ட கார்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து நட்சத்திர ஆதரவு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று வாகனச் சேவைகள் வழங்கும் நிறுவன உரிமையாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் லம்பென்சி டீடெய்லிங் (Lambency Detailing) என்ற கார் நிறுவனத்தின் வாடிக்கையாளரிடமிருந்து அண்மையில் புகார் ஒன்றைப் பெற்றது.
காருக்குச் சாயம் பூசுவது, காரின் உட்புறத்தைச் சுத்தம் செய்வது போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனம் தனது பெயரில் அதன் இணையத்தளத்தில் கருத்துகள் பதிவேற்றியதை வாடிக்கையாளர் கண்டறிந்தார்.
விசாரணையைத் தொடர்ந்து மேலும் ஏழு வாடிக்கையாளர்கள் கூறியதைப் போன்ற போலியான கருத்துகளோடு தங்கள் வாகனப் பதிவு எண்களும் வாகனப் புகைப்படங்களும் ஒப்புதல் இல்லாமல் பதிவேற்றப்பட்டதாகக் கூறினர்.
ஆதாரத்துடன் நேரடியாக விசாரித்தபோது லம்பென்சி டீடெய்லிங் நிறுவனத்தை நடத்தும் குவன்டன் குளோப் நிறுவனம் போலியான கருத்துகள் பதிவேற்றப்பட்டதை ஒப்புக்கொண்டது.
அந்தக் கருத்துகள் எஸ்ஜிகார்மார்ட் நிறுவனம் வழங்கிய கியூஆர் குறியீடு மூலம் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் மூலம் கார் இணையத்தளங்கள், ஃபேஸ்புக், கூகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் கருத்துகளைப் பதிவிடலாம்.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் பெற்ற சேவைக்கு ஏற்ப சேட்ஜிபிடி மூலம் கருத்துகள் தயாரிக்கப்பட்டதாகவும் குவாண்டம் குளோப் சொன்னது.
போலியான வாடிக்கையாளர் கருத்துகளைப் பதிவேற்றம் செய்வது நியாயமற்ற வர்த்தகப் பழக்கம் என்று சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பிட்ட ஒரு பொருளோ சேவையோ நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று வாடிக்கையாளர்கள் தவறாக நினைக்கக்கூடும் என்றும் பொருள்களை வாங்க தவறான முடிவுகளை எடுக்க காரணமாகக்கூடும் என்றும் சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் சுட்டியது.
நியாயமற்ற வர்த்தகப் பழக்கங்களில் குவாண்டம் குளோபல் நிறுவனம் இனி ஈடுபடாது என்று அதன் இயக்குநர் மெத்தியூ லிம் தெரிவித்தார்.
எஸ்ஜிகார்மாட்டில் பதிவேற்றப்படும் போலியான கருத்துகள் குறித்து புகாரளிக்க வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புத் தளத்தை அமைக்கப்போவதாக அவர் கூறினார்.
அது ஆறு மாதங்களுக்குச் செயல்படும்.
தனது தளத்தில் வெளியிட்ட போலியான கருத்துகள் பற்றி எஸ்ஜிகார்மார்ட் தளத்திலும் இதர தளங்களிலும் தெரிவிக்கப்போவதாகவும் திரு லிம் சொன்னார்.

