ராஃபிள்ஸ் பொலிவார்ட் பகுதியில் அமைந்திருக்கும் மரினா ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு வெளியே கார் ஒன்று சறுக்கி, நிலைதடுமாறி நடைபாதையின்மீது ஏறியது.
வியாழக்கிழமை(ஜனவரி 9) அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் 60 வயது டாக்சி ஓட்டுநர் காயமடைந்தார்.
‘Roads.sg’ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான காணொளியில் ‘டிரான்ஸ் கேப் சர்வீஸ்’ நிறுவனத்தின் டாக்சி ஒன்றின் கதவுகளும் பின்பக்கமும் திறந்த நிலையில் இருப்பதைக் காண முடிந்தது.
மேலும், ‘மரினா ஸ்குவேர்’ கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள நடைபாதைக்கு அருகே இருக்கும் புல் தரையில் அந்தக் கார் நின்றிருப்பதையும் அதில் பார்க்க முடிந்தது.
ஈரமான மண்ணின் தடம், பொருத்தப்பட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்ட தீயணைப்புக் கருவி, கார் சறுக்கியதற்கான அடையாளங்கள் ஆகியவற்றையும் காரின் முன்பகுதி சேதமடைந்து உள்ளதையும் அந்தக் காணொளி தெளிவாக எடுத்துக்காட்டியது.
அந்த டாக்சி தானாக சறுக்கியதாக நம்பப்படுகிறது என்றும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அந்த டாக்சி ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் காவல்துறை கூறியது. விசாரணை தொடர்கிறது.

