சிங்கப்பூரின் 2030ஆம் ஆண்டுக்குள்ளான பருவநிலை இலக்குகளை அடையும் நோக்கத்துடன் புதிய கரிம வெளியேற்றக் கட்டுப்பாடுகள் அறிமுகப் படுத்தப்படவுள்ளன.
அதன்படி, 2028ஆம் ஆண்டுமுதல் பெரிய வர்த்தகங்களில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதிகளுக்கு கரிம வெளியேற்ற வரம்புகள் விதிக்கப்படவுள்ளன. அந்த வரம்புகள் அதே ஆண்டு புதிய கார்களுக்கும் விதிக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வியாழக்கிழமை (மே 28) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
குளிர்பதனப் பெட்டிகளும், குளிர்சாதனங்களும் ‘ஹைட்ரோஃபுளுரோகார்பன்’ (ஹெச்எஃப்சி) எனப்படும் வாயுக்களைக் கொண்டு அவை அமைந்திருக்கும் இடங்களைக் குளிரூட்டுகின்றன. ஆனால் அவை உலகம் வெப்பமயமாதலுக்கு கரியமில வாயுவைவிட ஆயிரம் மடங்குக்கு மேல் காரணமாக அமைகின்றன.
அடுத்த ஆண்டு (2027) முதல் பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் புதிய வர்த்தகக் குளிர்பதனச் சாதனங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உலக வெப்பமயமாதல் அளவுகோலுக்கு (GWP) இணங்க 150 என்ற புள்ளியை உச்ச வரம்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் அதே உச்ச வரம்பின் தர நிலையைக் கடைப்பிடிக்கின்றன.
இதன்படி, ஒரு நூற்றாண்டில் கரியமில வாயுவைவிட 150 மடங்கு அளவே இவை உலக வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கும்.
இதே உச்ச வரம்புக்கான அளவுகோல்கள், 2028ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் புதிய பயணிகள் கார்களுக்கும் இலகு சரக்கு வாகனங்களுக்கும் விதிக்கப்படும்.
குறைந்த வெப்பமயமாதல் அளவுகோளுடன் உள்ள புதிய வாகனங்கள் சந்தையில் பெருமளவு இல்லை என்பதால், அவற்றுக்கான அமலாக்கத் தேதி சற்று தள்ளிவைக்கப்பட்டது என்று வாரியம் தெரிவித்தது. அது வாகன விற்பனையாளர்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப தயாராக நேரம் வழங்கும் எனவும் வாரியம் விளக்கியது.
ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் குறைந்த வெப்பமயமாதலுக்கு ஏற்ப குளிர்பதனச் சாதனங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கட்டுப்பாடு
கரியமில வாயு வெளியேற்றக் கட்டுப்பாடுகள் 2022ஆம் ஆண்டில் இல்லங்களில் பயன்படுத்தப்படும் குளிர்பதனப் பெட்டிகளுக்கும் குளிர்சாதனத்துக்கும் அறிமுகம் செய்யப்பட்டன. பெரிய கட்டடங்களில் பயன்படும் தண்ணீரைக் கொண்டு செயல்படும் குளிர்பதன அமைப்புகளுக்கும் அதே ஆண்டு உச்ச வரம்பு அமலாக்கப்பட்டது.

