சிங்கப்பூரில் நிலத்தைப் பயன்படுத்தும் துறையின் கரிம வெளிப்பாடு இப்போது முதல் 2030ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குள்ள காடுகளை அழிப்பதற்கான கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதால் புவியை வெப்பமாக்கும் கரிம வெளிப்பாடு அதிகமாக இருக்கக்கூடும்.
நிலப் பயன்பாட்டுத் துறை 2022ஆம் ஆண்டு வெளிப்படுத்திய கரிமத்தின் அளவு நாட்டின் ஒட்டுமொத்த விகிதத்தில் 0.06 விழுக்காடு.
அதைவிட எரிசக்தித் துறையில் இருந்து வெளியாகும் கரிமத்தின் அளவே சிங்கப்பூரில் ஆக அதிகமானது.
இந்நிலையில், நிலப் பயன்பாட்டால் வெளியாகும் கரிம வெளிப்பாடு எந்த அளவுக்கு மாற்றம் காணும் என்ற விவரம் ஐநா மன்றத்தில் சிங்கப்பூர் ஏற்கெனவே சமர்ப்பித்துள்ள பருவநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
காடுகளை அழிப்பதால் மறையும் கரிம வெளிப்பாடு புதிதாக நடப்படும் மரங்களால் குறுகிய காலத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை அது உணர்த்துகிறது.
சிங்கப்பூரின் நிலப் பயன்பாடு, இயற்கை நிலப்பரப்பின் பயன்பாட்டு மாற்றம், வனம் ஆகியவற்றை உள்ளடக்கிய (LULUCF) துறையில் இருந்து வெளியான வெவ்வேறு வாயுக்களின் அளவு, 0.04 மில்லியன் டன் கரியமில வாயுக்குச் சமமாக இருந்தது என்று 2022ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை கூறியது.
“இந்த அளவு 2025ஆம் ஆண்டில் 0.09 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். தொடர்ந்து, 2030ஆம் ஆண்டு 0.14 மில்லியன் டன்னாக அது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என சிங்கப்பூரின் முதல் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மீண்டும் காடுகளை உருவாக்குவது, புதிதாக மரங்களை நடுவது போன்ற முயற்சிகளால் அந்த நிலை உருவாகக்கூடும் என்றும் அது தெரிவித்தது.
2030ஆம் ஆண்டுக்குள் தீவு முழுவதும் ஒரு மில்லியன் மரங்களை நடும் திட்டம் சிங்கப்பூரில் நடப்பில் உள்ளது.
‘OneMillionTrees’ என்னும் பிரசார இயக்கம் 2020 ஏப்ரலில் தொடங்கியது முதல் இதுவரை 730,000க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு உள்ளன.
நிலப் பயன்பாடு, இயற்கை நிலப்பரப்பின் பயன்பாட்டு மாற்றம், வனம் ஆகியவற்றை உள்ளடக்கிய துறை 2000 முதல் 2010 தொடக்கம் வரை வெளியேற்றிய கரிமத்தைவிட இங்குள்ள நிலம் உறிஞ்சிய கரிமம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.