சிகிச்சைக்குப்பின் ஆதரவு வழங்கும் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் திட்டம்

மூளைக்கட்டி நோயாளிகளுக்கு ஆதரவளிக்க அறிமுகம்

சிகிச்சைக்குப்பின் ஆதரவு வழங்கும் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் திட்டம்

2 mins read
88248802-0c27-4cee-930d-a99d5775b289
சிங்கப்பூர் மூளைக்கட்டி ஆதரவுச் சமூக நிறுவனரும் தலைவருமான மெலிசா லிம், கதிர்வீச்சு, புற்றுநோயியல் நிபுணரும், இணைப் பேராசிரியருமான மருத்துவர் பாலமுருகன் வெள்ளையப்பன். - படம்: சிங்கப்பூர் மூளைக்கட்டி ஆதரவுச் சமூகம்

மூளைக் கட்டியால் பாதிப்படைந்து, மீண்டு வருவோர்க்கு ஆதரவளிக்கும் நோக்கில் புதிய பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

தேசிய புற்றுநோய் சிகிச்சை நிலையம் (NCIS), தேசிய நரம்பியல் கழகம் (NNI) ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் மூளைக்கட்டி ஆதரவுச் சமூகம் (BTSS) இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

“மூளைக் கட்டி பாதிப்பு வெறும் அறுவை சிகிச்சையுடன் முடிந்துவிடும் ஒன்றல்ல. நோயாளி, அவரின் குடும்பத்தினர், பராமரிப்பாளர்கள் ஆகிய அனைவருக்குமான நீண்ட காலப் போராட்டம். அந்நேரத்தில், அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் வண்ணம் இந்தத் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது,” என்றார் மூளைக்கட்டி ஆதரவுச் சமூகத்தின் நிறுவனரும் தலைவருமான மெலிசா லிம்.

“பெரும்பாலும் அறுவை சிகிச்சை, மருத்துவமனை வாசம் ஆகியவற்றைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்றவுடன் புதிய அறிகுறிகள் தோன்றலாம். அதனைக் கண்டு நோயாளிகளும் குடும்பத்தினரும் கவலையடைந்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் விரைவதுண்டு,” என்று கதிர்வீச்சு, புற்றுநோயியல் நிபுணரும், இணைப் பேராசிரியருமான மருத்துவர் பாலமுருகன் வெள்ளையப்பன் கூறினார்.

அறிகுறிகள் நினைவாற்றல் இழப்பு தொடங்கி, வலிப்பு ஏற்படுவது வரை எதுவாகவும் இருக்கலாம் எனக் குறிப்பிட்ட மருத்துவர் பாலா, “அந்த நோய்க்குப் பிறகு வாழ்வியல் மாற்றங்களும் தேவைப்படும்,” என்றார்.

“இத்தகைய அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறையும்போது, அதுகுறித்துப் பகிர்ந்துகொள்ளவும் தெளிவுபெறவும் நிபுணர்கள் உடன் இருப்பதில்லை. பொதுவாகவே, பராமரிப்பாளர்களுக்கு ஏற்படும் மனக் குழப்பமும் அழுத்தமும் அதிகம். அதனை இவை இன்னும் அதிகப்படுத்தும்,” என்றும் அவர் சொன்னார்.

சிலருக்கு திடீரென எதிர்பாராத அறிகுறிகளும் தோன்றலாம் என்ற திருவாட்டி மெலிசா, “கண்ணில் நீர் சுரக்காமல் போவது, செவித்திறன் குறைபாடு, ஒரு கண் மூடாமல் இருப்பது போன்ற எந்த வகையிலும் அவை தோன்றலாம். அப்போது, அவற்றின் தன்மை, எவ்வாறு அதனை அணுகுவது உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள நிபுணர் ஒருவரின் உதவி தேவை,” என்றார்.

அதனைத் தீர்க்க இந்தத் திட்டம் அறிமுகம் கண்டதாகக் கூறிய திருவாட்டி மெலிசா, உள்ஒருங்கிணைப்பாளர்கள் (internal coordinators) எனும் பராமரிப்பு நிபுணர், பெற்றோருக்கும் ஒவ்வொரு நோயாளிக்கும் உதவிபுரிவர் என்றும் விளக்கினார்.

இவற்றுடன், சமூக, மனநலத்திற்கான ஆதரவையும் தங்கள் அமைப்பின் தொண்டூழியர்கள் அளிப்பர் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்துக்காக திரட்டப்படும் நிதி, தேசிய புற்றுநோய் சிகிச்சை நிலையம் (NCIS), தேசிய நரம்பியல் கழகம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படவுள்ளது.

“இவ்வகை நோய்கள், அதனைத் தொடர்ந்த பராமரிப்பு, அவர்களுக்கான ஆதரவினைச் சமூகமாக ஒன்றிணைந்தால்தான் சாத்தியப்படுத்த முடியும்,” என்ற மருத்துவர் பாலா, ஒரு மருத்துவராகச் சிகிச்சை முடிந்த கையுடன் தமது வேலை முடிந்ததாக எண்ணாமல், நீண்டகால ஆதரவைத் தரும் திட்டத்தில் பங்களிப்பதில் மகிழ்ச்சிகொள்வதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்