கேர் கார்னர் சிங்கப்பூர் (Care Corner Singapore) என்ற அமைப்பு தோ பாயோவில் ஆறு புதிய கிளை நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. அந்தக் கிளை நிலையங்கள் அடுத்த ஈராண்டுகளில் அமைக்கப்படும்.
உடற்பயிற்சித் திட்டங்கள், சமூக உணவு விருந்து நிகழ்வுகள் ஆகிய துடிப்புமிக்க மூப்படையும் சேவைகளுக்கு முத்தோர் நீண்ட தூரம் நடந்துசெல்வதைத் தவிர்க்க ஆறு புதிய நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த புதிய ‘ஏஜ் வெல்’ அக்கம்பக்கத் திட்டத்தின்கீழ் தோ பாயோவில் உள்ள மூத்தோர் முதலில் பயனடையவிருக்கின்றனர்.
சமூக, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்கும் கேர் கார்னர் அமைப்பு, தோ பாயோவில் தற்போது ஏழு துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களையும் உட்லண்ட்சில் அத்தகைய இரண்டு நிலையங்களையும் நடத்துகிறது.
வீடுகளைவிட்டு தூரமாகப் பயணம் செய்ய விருப்பமில்லாத மூத்தோருக்காகக் கூடுதலாக அமைக்கப்படும் நிலையங்கள் சேவைகளை வீட்டிற்கு அருகிலேயே கொண்டுவருகின்றன என்றார் கேர் கார்னர் அமைப்பின் தலைவர் ஷேரன் டேங்.
‘ஏஜ் வெல்’ அக்கம்பக்கங்களின் உருவாக்கம் சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நீண்ட காலப் பராமரிப்புடன் வாழ்வதற்கான வசதிகளைக் கொண்ட அந்த அடுக்குமாடி வீடுகளை அரசாங்கம் கட்டுகிறது.
அந்தத் திட்டத்தின்கீழ் பராமரிப்பு ஊழியர்கள் சேவைகளை ஒருங்கிணைப்பதோடு அடிக்கடி மூத்தோரைச் சென்று சந்தித்து அவசர நேரத்தில் உடனடி உதவியை வழங்க முடியும்.
தோ பாயோவில் கூடுதலான துடிப்புடன் மூப்படையும் நிலையங்களை அமைக்க புதிய தளங்கள் அடையாளம் காணப்படுவதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தோ பாயோவில் தற்போது அத்தகைய 13 நிலையங்கள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கு ஆறு நிலையங்கள் மட்டும் இருந்தன.