கடந்த 2024 செப்டம்பர் மாதம், சாலையின் குறுக்கே நடந்த பாதசாரி ஒருவர் நூலிழையில் விபத்தில் சிக்காமல் தப்பினார்.
பேருந்து ஒன்று அவரை நெருங்கிய நிலையில், கடைசி நொடியில் பேருந்து ஓட்டுநர் அதனை நிறுத்தியதால் அந்தப் பாதசாரி தப்பினார். அதனால், பேருந்திலிருந்த இரு பயணிகள் விழ நேரிட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அச்சம்பவம் தொடர்பான ‘எஸ்எம்ஆர்டி’ பேருந்து ஓட்டுநர் ஜெக்கியபெல் ஏந்தனி தாஸ், 39, அண்மையில் அளித்த பேட்டியில், கவனமாகச் சாலையைக் கடக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
“சாலையைக் கடக்கும்போது காதொலிக்கருவி (headphone) சத்தத்தை அளவுக்கதிகமாக வைக்காதீர்கள். அப்பொழுதுதான், அவ்வழியே வரும் வாகனங்களின் சத்தம் உங்களுக்குக் கேட்கும்.
“குறிப்பாக, போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது, சாலையைக் கடப்பதற்குமுன் சுற்றும் முற்றும் பார்க்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே சாலையைக் கடக்கவேண்டும்,” என்றார் திரு தாஸ்.
தான் பலமுறை ஒலிப்பானை அழுத்தி ஒலியெழுப்பியபோதும் அந்தப் பாதசாரி காதொலிக்கருவி அணிந்திருந்ததால் அந்தச் சத்தம் அவருக்குக் கேட்கவில்லை என்றார் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிவரும் திரு தாஸ்.

