இளையர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அவர்கள் குண்டர் கும்பல்களில் இணைவதற்கான ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண ஆசிரியர்களுக்கும் சமூகச் சேவையாளர்களுக்கும் காவல்துறை பயிற்சி அளிக்கவுள்ளது.
குண்டர் கும்பல்களை விட்டு வெளியேற விரும்பும் இளையர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க இப்புதிய திட்டம் உதவும்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற ‘கேர்’ (CARE) எனப்படும் முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கான சமூகச் செயற்கட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய சட்ட அமைச்சர் எட்வின் டோங், இந்த நடவடிக்கை உள்ளிட்ட 13 பரிந்துரைகளை அறிவித்தார்.
இந்த நடவடிக்கைகள், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து வழிநடத்தும் அமைச்சுகளுக்கு இடையிலான தளமான ‘தேசிய குற்றத்தடுப்பு, மறுமுறை குற்றத்தடுப்புக்கான குழுவின்’ (NCPR) தொடக்கமுயற்சிகளில் அடங்கும். ஆபத்தில் உள்ள தனிநபர்கள், குற்றவாளிகள், அவர்களின் குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்ய இந்தத் தளம் அரசு அமைப்புகளையும் சமுதாயப் பங்காளிகளையும் ஒன்றிணைக்கிறது.
ஆரம்பத்திலேயே தலையிட்டு உதவுவதற்கு ஏதுவாக இந்தக் காவல்துறைப் பயிற்சி அமையும் என்று திரு டோங் குறிப்பிட்டார். 2027 முற்பகுதியில் தொடங்கவுள்ள இப்பயிற்சியில் கிட்டத்தட்ட 120 ஆசிரியர்கள், சமூகச் சேவையாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ‘குண்டர் கும்பல் துறப்புத் திட்டம்’ (Gang Renunciation Programme) இளையர்கள் அதிலிருந்து விடுபட ஆதரவளிக்கும். முன்பு குண்டர் கும்பல்களிலிருந்து தற்போது திருந்தியுள்ள நபர்களின் வழிகாட்டுதல் ஆதரவும் இவர்களுக்கு வழங்கப்படும்.
“அதே பாதையில் நடந்துசென்று, தற்போது பிரகாசமான எதிர்காலத்தைத் தேர்ந்தெடுத்த ஒருவரிடமிருந்து கிடைக்கும் வழிகாட்டுதல் மிகவும் சக்திவாய்ந்தது,” என்று திரு டோங் கூறினார்.
இளையர்களே நாட்டின் எதிர்காலம் என்ற அவர் அவர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தவும், குற்றச்செயல்களிலிருந்து விலகி வாழவும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஒருவரின் சிறைவாசம் அவரின் குடுபத்தில் ஏற்படுத்தும் நீண்டகாலத் தாக்கத்தைப் பற்றியும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறைக்குச் சென்ற பெற்றோரின் பிள்ளைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு 3.9 மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்ட தரவுகளை அவர் சுட்டினார்.
இந்தத் தலைமுறைத் தொடர்பை உடைக்க, சிறைத்துறையும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து குடும்பங்களுக்கு உடனடி ஆதரவை வழங்கும்.
வயது முதிர்ந்த கைதிகளுக்கான ஆதரவும் வலுப்படுத்தப்படவுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் துடிப்புடன் மூப்படைதல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவர். முதியோர் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெறவும் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
இந்த ஆண்டு, சிங்கப்பூர்ச் சிறைத்துறையின் 80ஆம் ஆண்டுவிழா, மஞ்சள் நாடா சிங்கப்பூரின் 50ஆம் ஆண்டுவிழா, சிங்கப்பூர் தண்டனை காலத்திற்கு பிந்தைய பராமரிப்பு சங்கத்தின் (Singapore After-Care Association) 70ஆம் ஆண்டுவிழா ஆகியவை கொண்டாடப்படுகின்றன.
2000ல் 40.1 விழுக்காடாக இருந்த மறுமுறை குற்றம் புரிவோர் விகிதம், 2023ல் 21.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதையும் அமைச்சர் சுட்டினார்.
‘வளர்வோம் ஒன்றாக, வழிவகுப்போம் மாற்றத்திற்கு’ (GROWing Together, Empowering Change) எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாடு முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுப் பணிகளையும் சமுதாய மறுஇணைப்புக்கான கூட்டு முயற்சிகளையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மாநாட்டில் நடைபெற்ற குழுக் கலந்துரையாடல் அங்கத்தில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு, சட்ட அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா பங்கேற்றார்.
பலதரப்பட்ட அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “குடும்பமே நமது நங்கூரம். நாம் அனைவரும் பாதுகாப்பாக உணரக்கூடிய, நிபந்தனையற்ற அன்பை உணரக்கூடிய ஓர் இடம் உலகில் உண்டென்றால் அது குடும்பமாகத்தான் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“சிரமத்தில் இருக்கும் ஒரு சக மனிதரைக் காணும்போது, நாம் ஒவ்வொருவரும் முன்வந்து நமது பங்காளிகளை ஒருங்கிணைத்து உதவ வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார். தகவல்களைத் தடையின்றிப் பகிர்ந்துகொள்ளத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மிகச் சிறந்த பாலமாகச் செயல்படும் என்பதையும் அவர் சுட்டினார்.
இந்த உச்சநிலை மாநாடு தொடர்பில், சிங்கப்பூர்ச் சிறைத்துறையின் சமூகப் பங்காளித்துவ, குடும்பக் கொள்கைப் பிரிவின் துணை இயக்குநரான ஜஸ்டின் போல் விக்னேஸ்வரன், 52, கடந்த ஆண்டு ‘கேர்’ கட்டமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டுத் திட்டமான ‘குரோ’ (GROW) கட்டமைப்பு குறித்துப் பேசினார்.
“மறுவாழ்வு ஆதரவுத் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல் (Galvanising), சேவைகள், திட்டங்களில் ஏற்படும் இரட்டிப்பைக் குறைத்தல் (Reducing), வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் (Optimising), பங்காளர்களின் வலையமைப்பை விரிவுபடுத்துதல் (Widening) ஆகிய நான்கு முக்கியத் தூண்களைக் கொண்டதுதான் இந்த கட்டமைப்பு,” என்று அவர் கூறினார்.
‘குரோ’ கட்டமைப்பு எவ்வாறு மறுவாழ்வுப் பணிகளை மேம்படுத்துகிறது என்பது குறித்து அவர், “தற்போதுள்ள 170க்கும் மேற்பட்ட சமூகப் பங்காளிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒரு தெளிவான திசையைக் காட்டுவதே இக்கட்டமைப்பின் நோக்கமாகும்,” என்றார்.
சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகள் கணக்கிலான மறுமுறை குற்றம்புரியும் விகிதம் 21.9 விழுக்காடாகக் குறைவாக இருந்தாலும், ஐந்து ஆண்டுகள் கணக்கிலான விகிதம் 39.3 விழுக்காடாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதாவது கிட்டத்தட்ட பத்து பேரில் நான்கு பேர் மீண்டும் சிறைக்குச் செல்லும் சூழல் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நீண்ட காலத்திற்குச் சிறைத்துறையின் ஆதரவு மட்டுமே போதுமானதாக இருக்காது என்பதால், சமுதாயத்தின் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்றார்.
முன்னாள் கைதிகள் சமூகத்தில் இணைவதற்கு அளிக்கப்படும் ஆரம்பகால ஆதரவு குறித்துப் பேசிய அவர், “கைதிகள் சிறைக்கு வரும்போதே, அவர்களுக்கு 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இருந்தால், உடனடியாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, குடும்ப சேவை நிலையங்கள், சமூக சேவை அமைப்புகளுக்குத் தகவல் தெரிவிக்கிறோம். இதன்மூலம் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்குக் காலதாமதமின்றி உடனடியாக ஆதரவு கிடைக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த சமுதாயமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


