‘ஏஐ’ தாக்கத்தால் வேலையிழக்க வாய்ப்புள்ள ஊழியர்களுக்கு மாற்றுப் பாதை

ஊழியர்களின் பணி பாதிப்படையுமுன், மாற்றத்துக்கான திட்டங்களை உருவாக்கப் பரிந்துரை

‘ஏஐ’ தாக்கத்தால் வேலையிழக்க வாய்ப்புள்ள ஊழியர்களுக்கு மாற்றுப் பாதை

3 mins read
8b9e9c63-9ccb-404e-b513-8cb3f964dfc9
மே 13 ஆம் தேதியன்று மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்ற எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் பேசிய துணைப்பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவு, தானியக்கமயமாக்கல் ஆகியவை சில துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள நிலையில், அந்தத் துறைகள் சார்ந்த ஊழியர்களுக்கு, அவர்களது திறன்களுக்கேற்பப் பாதைகள் கட்டமைக்கப்பட வேண்டும் என்று பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் (Economic Strategy Review (ESR) Committees) பரிந்துரைத்துள்ளன.

இந்தத் தாக்கத்தினால் பாதிப்படைய வாய்ப்புள்ள ஊழியர்களுக்கு உரிய பயிற்சி, வழிகாட்டல், பொருத்தமான பணி ஆகியவற்றுக்கு உதவும் வகையில் இப்பாதைகள் அமைக்கப்படவேண்டும் என்கிறது அந்தப் பரிந்துரை.

ஊழியர்களின் பணி பெரிதும் பாதிப்படைவதற்கு முன்பு, மாற்றத்துக்கான திட்டங்களை முனைப்புடன் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு அமர்வுகளை நடத்தி, மாறிவரும் உலகளாவிய சூழலில் வளர்ச்சியைப் பாதுகாப்பதற்கும், நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குமான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் சமர்ப்பித்தன.

எட்டு முக்கிய அடிப்படைகளைக் கொண்ட அப்பரிந்துரைகள் குறித்து, எதிர்காலப் பொருளியல் மாநாட்டில் பேசினார் துணைப்பிரதமர் கான் கிம் யோங்.

சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த அம்மாநாடு, மே 13 ஆம் தேதியன்று மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

“போட்டித்தன்மையைச் சமாளிக்க வலிமை மட்டுமன்றி, மாற்றங்களுக்கேற்பப் புதுப்பித்துக் கொள்வது அவசியம்,” எனத் திரு கான் வலியுறுத்தினார்.

“நமது பொருளியல் உத்திகள் சிங்கப்பூரர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளாக மாற வேண்டும். வேலை வாய்ப்புகள் தானாக உருவாகா. அவற்றை நாம் உருவாக்க வேண்டும்,” என்றார் அவர்.

நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வேளையில், ஊழியர்களின் தரத்தையும் பணியில் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்க வேண்டுமென்று கூறிய துணைப் பிரதமர், “எல்லா வேலைகளையும் பாதுகாக்க முடியாவிட்டாலும், ஊழியர்கள் எல்லாரையும் பாதுகாப்போம்,” என்றும் நம்பிக்கையளித்தார்.

“பகுத்தறிந்து முடிவெடுத்தல், நம்பிக்கை, மனிதத் தொடர்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சுகாதாரம், பாலர் பருவக் கல்வி, சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் பணிகளைச் செயற்கை நுண்ணறிவால் எளிதில் செய்ய முடியாது,” என்றார் அவர்.

மேலும், வேலை மாற்றங்களுக்கும் அதற்குரிய திறன் வளர்ச்சிக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதற்கான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

தொடர்ந்து, வாழ்நாள் கற்றல் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் திரு கான் குறிப்பிட்டார்.

மேலும், ஊழியர்கள் வேலையிழப்பதற்கு முன்பே கண்டறிந்து ஆதரவளிப்பது, நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளுக்கான ஆதரவு, ஊழியர்கள் மீதான செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் இடங்களில் கொள்கைகளை மறுஆய்வு செய்வது ஆகியவற்றையும் முக்கியப் பரிந்துரைகளாகப் பொருளியல் உத்தி மறுஆய்வுக் குழுக்கள் வழங்கின.

திறன் மேம்பாட்டுக்கான ஆதரவில், குறிப்பாகப் பணி மாற்றங்கள், வாழ்நாள் கற்றலுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவை ஆழப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக் கழகங்களில் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான நிதியை விரிவுபடுத்துவதுடன், திறன் பயிற்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்டு, பணியில் இருக்கும்போதே பயன்படுத்தக்கூடிய வகையில் கற்றல் பாதைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து திறன்களை வளர்த்துக்கொள்வது பணியில் முன்னேற்றமளிக்கும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறார் ஜிஷ்ணு செல்லப்பன்.

தொழில்நுட்பராகப் பணியில் இணைந்த அவர், தொழில்நுட்பக் கல்விக்கழக வேலை-கல்விப் பட்டயப் படிப்பை முடித்து, தற்போது மேற்பார்வையாளராக உயர்ந்துள்ளார்.

“தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பணியில் சேர்ந்த ஒரே மாதத்தில் படிப்பில் சேர்ந்தேன். இதனால் விரைவில் பணியில் முன்னேற்றம் கிட்டியது,” என்றார் ஜிஷ்ணு.

முதலில் கடினமாக இருந்தாலும், பல்வேறு திறன்களைக் கற்றது தமது பணியில் உதவுவதை அவர் சுட்டினார். தமது நிறுவனம் ஆதரவளித்ததாகவும் சொன்ன அவர், மேலும் படித்து பணியில் சிறக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்