வேலை தேடுவோருக்குச் சிறப்பு வழிகாட்டல்

3 mins read
a18e05f5-d41c-4fa3-83b3-8290134fcbb5
‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு ஆலோசனையைப் பெறும் பங்கேற்பாளர்கள். - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2

சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு (WSG) ஏற்பாடு செய்திருந்த அதன் முதலாவது ‘கரியர் எக்ஸ்பி 2026’ (Career XP 2026) நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) சன்டெக் சிட்டி வளாகத்தில் நிறைவடைந்தது.

ஐந்து நாள்கள் நீடித்த இந்நிகழ்ச்சி, வேலை அனுபவம் கொண்டவர்களையும் அண்மையில் பட்டம் பெற்றவர்களையும் சென்றடையும் வகையில், விளையாட்டு அம்சங்களை இணைத்த மிகப் பெரிய வேலைவாய்ப்பு நிகழ்ச்சியாக அமைந்தது.

தொழில்முறை நிபுணர்களுக்கான ‘கரியர் எக்ஸ்பி’ ஜனவரி 21 முதல் 22 வரை நடந்தேறியது. பணியில் இருந்துகொண்டே தங்கள் தொழில் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு முயல்வோருக்கென அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது.

இளையர்களுக்கான ‘கரியர் எக்ஸ்பி’ ஜனவரி 23 முதல் 25 நடைபெற்றது. வேலைச் சந்தையில் புதிதாக நுழையும் பட்டதாரிகளுக்காக இந்த அங்கம் உருவாக்கப்பட்டது.

மொத்தத்தில் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் பங்கேற்றன. நிதிச் சேவை, சுகாதாரம், கல்வி, விண்வெளி போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான 1,700 வேலைவாய்ப்புகள் இதில் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் இறுதி நாளன்று வருகையளித்த மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், அதிகச் சவால்கள் நிறைந்திருக்கும் தொழிலாளர் சந்தையைச் சமாளிக்க வேலை தேடுவோருக்கு, குறிப்பாக இளம் பட்டதாரிகளுக்கு உதவும் நோக்கில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் வருகைதந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் வருகைதந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். - படம்: பெரித்தா ஹரியான்

“இங்கு இடம்பெற்றுள்ள 1,700 வேலைகளில் கிட்டத்தட்ட 1,000 இடங்கள் நுழைவுநிலைப் பணிகளாகும்.

“அவை முக்கியமாக நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கானவை (PMETs) என்பதோடு, நிதிச் சேவை, சுகாதார அறிவியல் போன்ற துறைகளில் நல்ல சம்பளம் உள்ள வேலைகளாகவும் அமைந்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய பட்டதாரிகள் பலர் எதிர்கொள்ளும் கவலைகளின் தொடர்பாகப் பேசிய அமைச்சர், சிலருக்குத் தன்விவரக் குறிப்பு (résumé) எழுதுவதிலும், வேலைக்கான நேர்காணலுக்குத் தயாராவதிலும் திறன்களில் இடைவெளி இருப்பதை உணர முடிவதாகக் கூறினார்.

‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் வருகைதந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியின் இறுதி நாளன்று மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் வருகைதந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். - படம்: பெரித்தா ஹரியான்

“இந்தப் பயணத்தில் அவர்களுக்கு உதவ எங்கள் வேலைவாய்ப்பு வழிகாட்டிகள் இங்கு உள்ளனர். நமது புதிய பட்டதாரிகளுடன் கைகோத்துச் செயல்பட்டு, அவர்களின் எதிர்காலத் தொழில் பாதையைத் திட்டமிட உதவுவதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது,” என்றார் திரு ஹுவாங்.

விளையாட்டுப் பாணியில் ஐந்து நிலைகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவுகளைக் கேட்பது, முதலாளிகளைச் சந்திப்பது, வேலைவாய்ப்பு வழிகாட்டிகளிடமிருந்து நேரடி ஆலோசனைகளைப் பெறுவது ஆகியவற்றின் மூலம் பங்கேற்பாளர்கள் அனுபவப் புள்ளிகளை பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியில் சிறப்புக் கலந்துரையாடல்களிலும் சொற்பொழிவுகளிலும் இளையர்கள் கலந்துகொண்டனர்.
‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியில் சிறப்புக் கலந்துரையாடல்களிலும் சொற்பொழிவுகளிலும் இளையர்கள் கலந்துகொண்டனர். - படம்: பெரித்தா ஹரியான்

வேலைவாய்ப்பு நிலவரம் நம்பிக்கைக்குரியதாகவே உள்ளதாக திரு ஹுவாங் குறிப்பிட்டார்.

“நமது பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் வேலை பெற்றுள்ளனர். அதேபோல், பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டதாரிகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஆறு மாதங்களுக்குள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

“2026ஆம் ஆண்டிற்கான போக்குகள் நன்றாக உள்ளன. மேலும் அதிகமான இளையர்கள் நல்ல வேலைகளில் சேர உதவ முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று அமைச்சர் ஹுவாங் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் பயனடைந்தவர்களில் 24 வயது சிவநாதன் தேவதர்ஷினியும் ஒருவர். மனிதவளத் துறையில் 2024ல் பட்டம் பெற்ற இவர், நிலப் போக்குவரத்து ஆணையத்தில் நிர்வாக ஊழியராக ஓராண்டு ஒப்பந்தப் பணியை முடித்த பிறகு, அடுத்தகட்ட பணியிட நகர்வு குறித்து தற்போது குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார்.

‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற் 24 வயது சிவநாதன் தேவதர்ஷினி.
‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற் 24 வயது சிவநாதன் தேவதர்ஷினி. - படம்: யோகிதா அன்புச்செழியன்

“நான் பட்டம் பெற்ற புதிதில் ஏறக்குறைய 200 வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நேர்காணலுக்கு அழைப்பு வருவது அரிதாகவே இருந்தது. இப்போது ஓராண்டு அனுபவம் இருந்தும் வேலை தேடுவது கடினமாக உள்ளது,” என்றார் இவர்.

‘கரியர் எக்ஸ்பி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தமக்குத் தெளிவான திசையைக் காட்டியிருப்பதாக தேவதர்ஷினி கூறினார். தனிப்பட்ட ஆலோசனை அமர்வுகள், மதிப்பீடுகளின் மூலம் பயனடைந்ததாகவும் அவர் சொன்னார்.

“இங்குள்ள கருவிகள், எனக்கு அளிக்கப்பட்ட ஆலோசனைகள் என் திறன்களுக்குப் பொருத்தமான வேலைகள் எவை என்பதைக் காட்டியுள்ளன. அதுமட்டுமல்லாமல், கண்முடித்தனமாக எல்லா வேலைகளுக்கும் விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, எப்படிச் சரியான வேலைகளைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்,” என்றார் தேவதர்ஷினி.

குறிப்புச் சொற்கள்