தாதியரின் மருத்துவச் சிறப்பின் உச்சத்தை அடைய உதவும் வாழ்க்கைத்தொழில் மாதிரி, அவர்களின் தொழில்முறை நல்வாழ்வு, மேற்பார்வைத் திறன்கள், வேலை மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுடன் மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தாதியருக்கான நிலைக்குழு, இந்த முக்கிய முன்னுரிமைகள் குறித்து பொதுச் சுகாதாரக் குழுமங்கள் மற்றும் சமூகப் பராமரிப்புத் துறையுடன் இணைந்து செயல்படும் என்று சுகாதார மற்றும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) அன்று கூ டெக் புவாட் மருத்துவமனையில் நடைபெற்ற 19வது டான் சின் துவான் தாதியர் விருது வழங்கும் விழாவில் திருமதி ரஹாயு உரையாற்றினார்.
“தாதியருக்கான நிலைக்குழுவின் கீழ், தாதியர்கள் மருத்துவ ரீதியாக முடிவெடுக்கவும் மற்றும் சுயமாக முடிவெடுப்பதை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக கடும் நோய்களுக்கான மருத்துவமனைகள், சமூக பராமரிப்புத் துறை இரண்டிலும் தாதியரின் திறன்களை வலுப்படுத்துவதையும் நாங்கள் பரிசீலிப்போம்,” என்று குழுவின் தலைவரான திருமதி ரஹாயு கூறினார்.
தாதிமைத் தலைவர்களுக்கான தற்போதைய மேற்பார்வை கட்டமைப்புகள் அவர்களின் தேவைகளைச் சிறப்பாக ஆதரிக்க மேம்படுத்தப்படும். இதனால் அவர்கள் தங்களுடன் பணியாற்றும் மற்ற தாதியரின் தேவைகளைச் சிறப்பாக ஆதரிக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திறமையான, மீள்தன்மை கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தாதிமைப் பணியாளர்களை உருவாக்குவதற்கான உத்திகளை ஏற்படுத்துவதற்காக, தற்போது அதன் இரண்டாவது தவணைகாலத்தில் உள்ள தாதியருக்கான நிலைக்குழு, 2023ல் உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இந்தத் தொழிலுக்கான உச்சத் தேர்ச்சி பெற்ற பதிவுசெய்யப்பட்ட தாதியருக்கான டான் சின் துவான் தாதிமை விருதை, பொது மற்றும் சமூக மருத்துவமனைகள், சமூக பராமரிப்பு சேவை மையங்களைச் சேர்ந்த 12 தாதியருக்கு திருமதி ரஹாயு வழங்கினார்.
“இந்த ஆண்டு சிங்கப்பூரில் 140 ஆண்டுகால தாதிமை வாழ்க்கையின் ஓர் அசாதாரண மைல்கல்லைக் குறிக்கிறது. இது அசைக்க முடியாத இரக்கம், மீள்தன்மை மற்றும் நிபுணத்துவ பராமரிப்பை வழங்கிய பல தலைமுறை தாதியரின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு மரபு,” என்று துணை அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இன்று, எங்கள் தாதியர் இந்தப் பெருமைமிக்க மரபை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். ஒவ்வொருவரும் நமது சுகாதார அமைப்புகளின் முன்னணியில் இருந்து நம் சமூகங்களின் இதயம் வரை நம் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு அர்த்தமுள்ள மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்,” என்றும் திருமதி ரஹாயு புகழாரம் சூட்டினார்.

