பராமரிப்பு விடுப்பு இயல்பானதாக மாற வேண்டும்: இந்திராணி ராஜா

பராமரிப்பு விடுப்பு இயல்பானதாக மாற வேண்டும்: இந்திராணி ராஜா

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 7:08 pm

2 mins read

ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக விடுப்பு எடுப்பதை அசாதாரண ஒன்றாகக் கருதக்கூடாது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் இந்தப் ‘புதிய எதார்த்தத்தை’ தங்களது வழக்கமான மனிதவளக் கொள்கைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள், வேலை மறுவடிவமைப்பு, மாற்று ஊழியர் ஏற்பாடுகள் போன்றவற்றுடன் பணியிடங்களை வடிவமைக்க வேண்டும் என்றார் அவர்.

வியாழக்கிழமையன்று, வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்ற ‘கல்டிவேட் எஸ்ஜி’ மாநாட்டில் கலந்துகொண்ட அவர், சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பராமரிப்புத் தேவை குறித்து பேசினார்.

கடந்த ஆண்டு வரலாறு காணாத குறைந்த அளவை எட்டிய ஒட்டுமொத்த கருவள விகிதமும், 2026இல் மிகவும் மூப்படைந்த சமூக எல்லையைக் கடந்த மக்கள்தொகையும் பராமரிப்புத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றார் அவர்.

காலப்போக்கில் குடும்பங்கள் சிறியதாகும். அதிகரிக்கும் முதியோருக்கு ஆதரவளிக்க வேலை செய்யும் வயதுடைய சிங்கப்பூரர்கள் குறைவாகவே இருப்பர். இளம் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு மட்டுமின்றி, வயதான உறவினர்களைப் பராமரிக்கும் திருமணமாகாதவர்கள், பிள்ளைகளற்ற இணையர்களுக்கும் உதவி தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்பார்வையாளர்கள், சக ஊழியர்களின் மனப்போக்கு, பணியிடக் கலாசாரம் ஆகியவற்றைப் பொறுத்தே ஊழியர்கள் தயக்கமின்றி விடுப்பு எடுக்க முடியும் என்பதையும் அவர் சுட்டினார்.

“விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது மேற்பார்வையாளர் அனுமதி அளித்தாலும், உண்மையில் விடுப்பு எடுக்கக் கூடாது என்பது போன்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டால் அது மிகவும் கடினம்,” என்றும் திருமணம், பிள்ளைப்பேறு ஆகியவற்றுக்கான மறு-ஆய்வுப் பணிக்குழுவின் தலைவர் இந்திராணி ராஜா கூறினார்.

சட்டபூர்வ உரிமையான விடுப்பைக்கூட எடுக்க விடாமல் மக்களைத் தடுக்கப் பல வழிகள் உள்ளதைச் சுட்டிய அவர், இளம் குடும்பங்களின் பராமரிப்புத் தேவைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சிங்கப்பூரால் தனது கருவள விகிதத்தை உயர்த்த முடியாது என்றும் சொன்னார்.

பெரும்பாலான முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்குப் பதிலாகத் தங்கள் வீடுகளிலேயே இருக்க விரும்புவதால், அனைவரும் வெவ்வேறு வழிகளில் பங்களிக்கும் முழுமையான பார்வை நமக்குத் தேவை என்று குறிப்பிட்டார்.

2026 தேசிய தினப் பேரணியில் அறிவிக்கப்பட்ட குடும்ப ஆதரவு நடவடிக்கைகளை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

தற்போது முதலாவது, இரண்டாவது பிள்ளைகளுக்கான மகப்பேற்று, தத்தெடுப்பு விடுப்புச் செலவின் ஒரு பகுதியையும், முதல் மூன்று நாள் பிள்ளைப் பராமரிப்பு விடுப்புச் செலவையும் முதலாளிகள் ஏற்கின்றனர். இச்செலவுகள் அனைத்தையும் விரைவில் அரசாங்கமே ஏற்கும். மேம்படுத்தப்பட்ட பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு தொடங்கும் தேதி குறித்த விவரங்கள் 2027 தொடக்கத்தில் வெளியிடப்படும்.

இதன்மூலம் முதலாளிகளின் செலவுச்சுமை கணிசமாகக் குறைந்து, தற்காலிக மாற்று ஊழியர்களை நியமிக்க முடியும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்