கட்டணக் கழிவுடனான பராமரிப்பாளர் ஓய்வுக்காலச் சேவையால் இவ்வாண்டு 14,600க்கும் மேற்பட்ட மூத்தோரைப் பராமரிப்போர் பலனடைந்துள்ளனர். இத்தகவலைச் சுகாதார அமைச்சு வெளியிட்டது.
மேம்பாட்டுத் தேவைகளைக் கொண்ட 3,600க்கும் மேற்பட்ட சிறுவர்களைப் பராமரிப்போருக்கும் உடற்குறையுள்ளோரைப் பராமரிப்பவர்களுக்கும் இந்தச் சலுகை பலனளித்துள்ளது.
மூத்தோர், மேம்பாட்டுத் தேவைகளைக் கொண்ட சிறுவர்கள், உடற்குறையுள்ளோர் மற்றும் அவர்களைப் பராமரிப்பவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய பராமரிப்பாளர் ஓய்வுக்காலச் சேவையைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன் புதன்கிழமை (ஜனவரி 14) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உதாரணத்துக்கு, சுகாதார அமைச்சின் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புக்கான அமைப்பின்கீழ் செயல்படும் இல்ல தனிநபர் பராமரிப்புச் சேவை இவ்வாண்டு மேம்படுத்தப்படும். இதன்மூலம் சேவை நேரம் நீட்டிக்கப்படும்.
பராமரிப்பாளர் ஓய்வுக்காலச் சேவை என்பது பராமரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் குறுகிய கால ஆதரவுத் திட்டமாகும்.
குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பராமரிப்பாளர்கள் ஓய்வெடுக்கும்போது அவர்களால் பராமரிக்கப்படுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் பார்த்துக்கொள்ளப்படுவர். இதன்மூலம் பராமரிப்பாளர்களுக்கு மூத்தோர், உடற்குறையுள்ளோர் போன்றவர்களைப் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் உடற்சோர்வு மற்றும் மனவுளைச்சலிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது.
பராமரிப்பாளர் ஓய்வுக்காலச் சேவை குறித்து ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் கோ நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
உடனடி பராமரிப்புத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு அமைப்புடனும் எஸ்ஜி எனேபலுடனும் பராமரிப்பாளர் ஓய்வுக்காலச் சேவையை வழங்குபவர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
உதாரணத்துக்கு, நீண்டகாலப் பராமரிப்புக்குப் பிறகு உடற்சோர்வாலும் மனவுளைச்சலாலும் அவதியுறும் பராமரிப்பாளர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
உடற்குறையுள்ளோரையும் மேம்பாட்டுத் தேவைகளைக் கொண்ட சிறுவர்களையும் பராமரிப்பவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு ஓய்வெடுக்கும் திட்டம் மறுஆய்வு செய்யப்படுவதாக டாக்டர் கோ தெரிவித்தார்.

