தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பராமரிப்பு நடைமுறை வழிகாட்டிக் குறிப்புகள் குழந்தைப் பாதுகாப்புத் துறையினர்க்கானவை’

2 mins read
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தகவல்
c4480553-443e-421d-ab6e-2a5216303325
நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய குடும்பக் கருத்தரங்கில் புதிய வழிகாட்டிக் குறிப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட பிள்ளைப் பராமரிப்பில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தமான எல்லைகள் குறித்த வழிகாட்டிக் குறிப்புகள், குழந்தைப் பாதுகாப்புக் கட்டமைப்பின்கீழ் செயல்படுவோருக்கானவை என்று கூறப்பட்டுள்ளது.

அவர்கள், சிக்கலை எதிர்நோக்கும் குடும்பங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளக் கூடியவர்கள் என்று அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தவறாக நடத்தப்படுதல், கவனிப்பின்றி விடப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவற்றை அனுபவித்த பிள்ளைகளுக்கும் அவற்றுக்கு ஆளாகும் சாத்தியமுள்ள பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.

அந்த வழிகாட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்துவோர், அந்தக் குறிப்பேட்டின் தயாரிப்பில் கலந்தாலோசிக்கப்பட்ட வல்லுநர்கள் பற்றிய கேள்விகளுக்கு அமைச்சின் பேச்சாளர் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிக் குறிப்பேடு குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், டிசம்பர் 5ஆம் தேதி தகவல் வெளியிட்டது.

அன்பை வெளிப்படுத்துதல், கழிவறையைப் பயன்படுத்துதல் போன்றவை தொடர்பில் அந்தக் குறிப்பேடு பரிந்துரைகளை வழங்குகிறது. நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய குடும்பக் கருத்தரங்கில் வழிகாட்டிக் குறிப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டது.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான எல்லைகள் குறித்த வழிகாட்டிக் குறிப்புகளின்கீழ், ஒரு குழந்தை தானாகவே குளிக்குமளவு வளர்ந்த பிறகும் மகளைத் தந்தையோ மகனைத் தாயோ வழக்கமாகக் குளிக்க வைப்பதும் குழந்தையின் சங்கடத்தைப் பொருட்படுத்தாது யாரிடமாவது உடல்ரீதியாகப் பாசம் காட்டப் பெற்றோர் வலியுறுத்துவதும் பொருத்தமற்ற நடவடிக்கைகளாகும்.

குடும்பநலச் சேவை நிலையங்கள், குழந்தைப் பாதுகாப்புக்கான சிறப்பு நிலையங்கள், குழந்தைநல மருத்துவர்கள், மருத்துவத்துறை சமூக சேவையாளர்கள், பள்ளி ஆலோசகர்கள், மாணவர்நல அதிகாரிகள் ஆகியோருக்காக அந்த வழிகாட்டிக் குறிப்புகள் தயாரிக்கப்பட்டதாக அமைச்சு சொன்னது.

பிள்ளை வளர்ப்பில் சில நடவடிக்கைகள் பொருத்தமானவையா என்று தொழில்முறை ஊழியர்களும் பெற்றோரும் எழுப்பிய ஐயங்களைத் தொடர்ந்து அந்தக் குறிப்பேடு தயாரிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.

தானாகவே குளிக்கத் தெரிந்த, எட்டு வயதாகும் எதிர்ப் பாலினக் குழந்தையைக் குளிப்பாட்டிய பெற்றோர், 13 வயதாகும் எதிர்ப் பாலினக் குழந்தையின் சங்கடத்தைப் பொருட்படுத்தாது அதன் படுக்கையில் தனியாகப் படுத்துறங்கிய பெற்றோர் ஆகியோர் கேள்வி எழுப்பியோரில் அடங்குவர்.

தாங்கள் தீங்கு விளைவிப்பது குறித்து அறிந்திருக்கவில்லை என்று அந்தப் பெற்றோர் கூறிய வேளையில் பிள்ளையுடன் ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொள்ளும்படி வல்லுநர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறியதாக அமைச்சு குறிப்பிட்டது.

வழிகாட்டிக் குறிப்புகளை அமலாக்கம் செய்யும் திட்டம் இல்லை என்றாலும் பிள்ளை வளர்ப்பு தொடர்பான கூடுதல் வளமாக அது கருதப்படும் என்றது அமைச்சு.

உடற்குறையுள்ள வளர்ந்த குழந்தையைக் கொண்ட பெற்றோர், ஒற்றைப் பெற்றோர் போன்றோருக்கு, குடும்பத்தினருக்கு இடையிலான ஆரோக்கியமான எல்லைகளைப் பேணியவாறே குழந்தையின் அன்றாடப் பராமரிப்புத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுபிள்ளைபெற்றோர்எல்லைவழிகாட்டி நெறிமுறை