கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் 2026ஆம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் கூடுதல் ரொக்க வழங்குதொகை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலப் பராமரிப்புக்கான செலவினம் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடுமையான உடற்குறையுள்ளோருக்கு உதவ கூடுதல் தொகை தரப்படுகிறது.
வழங்குதொகை வளர்ச்சி விகிதம் தற்போது ஆண்டுக்கு 2 விழுக்காடாக உள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டு வரை இது 4 விழுக்காடாக உயரும்.
இதன் விளைவாக 2030ஆம் ஆண்டில் வழங்குதொகை கேட்டு விண்ணப்பம் செய்வோருக்கு மாதந்தோறும் $731க்குப் பதிலாக $806 கிடைக்கும்.
தேசிய அளவிலான நீண்டகாலப் பராமரிப்புக்கான காப்புறுதித் திட்டத்தின் சந்தாத் தொகையை அதிகரிக்க வேண்டி வரும்.
இருப்பினும், சந்தாத் தொகை அதிகரிப்பால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடு செய்ய அரசாங்கம் கூடுதலாக $570 மில்லியன் வழங்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
தன்னிச்சையாக செயல்படும் கேர்ஷீல்டு லைஃப் மன்றம் முன்வைத்த பரிந்துரைகளில் இவை அடங்கும்.
மன்றத்துக்கு திருவாட்டி ஜெனட் வோங் தலைமை தாங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இவர் டிபிஎஸ் வங்கியின் முன்னாள் குழும நிர்வாகி.
கேர்ஷீல்டு லைஃப் குறித்து மறுஆய்வு செய்த மன்றம், 300 தனிநபர்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்தது.
கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம் அடுத்த பல ஆண்டுகளுக்கு நீண்டகாலப் பராமரிப்பு கட்டுப்படியான விலையில் இருப்பதையும் நீடித்த நிலைத்தன்மையுடன் இருப்பதையும் உறுதி செய்யும் என்று சுகாதார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் அது மறுஆய்வு செய்யப்படுகிறது.
1980ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் பிறந்த சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தக் கட்டாயத் திட்டம் வாழ்நாள் காப்புறுதியை வழங்குகிறது.
அவர்கள் ஏற்கெனவே உடற்குறையுள்ளவர்களாக இருந்தாலும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் அவர்களுக்குத் தேவையான காப்புறுதியை வழங்கும்.
1979ஆம் ஆண்டிலும் அதற்கு முன்பும் பிறந்தவர்கள் விருப்பப்பட்டால் கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
“அனைத்துச் சந்தாத் தொகையையும் மெடிசேவ் மூலம் முழுமையாகச் செலுத்தலாம். சந்தாத் தொகை செலுத்த முடியாத காரணத்தினால் கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் மூலம் கிடைக்கும் அனுகூலங்களைப் பெறாத நிலை யாருக்கும் ஏற்படாது,” என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.