தேசிய அளவிலான காப்புறுதித் திட்டங்களின் சந்தாக்களைக் கட்டுப்படியான விலையில் வைக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்திற்கான சந்தா குறைக்கப்படுகிறது.
இதன்மூலம் 2026ஆம் ஆண்டு முதல் சிறிய அல்லது நடுத்தர உடற்குறை உள்ள மூத்தோர் கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்திற்குத் தகுதிபெற முடியாது.
அதேபோல் உடற்குறை இல்லாத மூத்தோர் தற்போது கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்திற்குச் செலுத்தும் சந்தா தொகை குறையும்.
இதுகுறித்த தகவலைச் சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கேர்ஷீல்டு லைஃப் திட்டம் நிலைத்தன்மையாக இருக்கவும் அதேபோல் கட்டுபடியான விலையில் இருக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
கேர்ஷீல்டு லைஃப் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மசோதா தாக்கல் செய்யப்படும்போது நடத்த விவாதத்தில் டாக்டர் கோ இதுகுறித்து விவரித்தார். மேலும் இந்த மசோதா முழு ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
“காப்புறுதி திட்டத்தின் சந்தா குறைக்கப்படுவதால் சில தகுதி வரம்புகளில் மாற்றம் இருக்கும். அதேபோல் திட்டத்தில் சிறு வயதிலேயே இணைந்து அதிகச் சந்தா தொகை செலுத்தியவர்கள் இனி குறைவான தொகை செலுத்தினால் போதும்,” என்று டாக்டர் கோ குறிப்பிட்டார்.
1979ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்குச் சிறிய அல்லது நடுத்தர உடற்குறை உள்ளவர்கள் 2026ஆம் ஆண்டு முதல் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்திற்குத் தகுதிபெறமாட்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதால் சிகிச்சைக்குப் பின் கிடைக்கும் மருத்துவக் கட்டணத்தைப் பெறும் நபர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் சந்தா தொகையும் குறையும்.
புதிய மாற்றத்தால் மெர்டேக்கா தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு ஆண்டு காப்புறுதி திட்டத்தில் 100 வெள்ளிக்கு மேல் சந்தா குறைக்கப்படும்.