தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேர்ஷீல்டு லைஃப் திட்டம் 2026 ஜனவரியில் மேம்பாடு காண்கிறது

2 mins read
1770c076-5b94-489f-a2a7-7070d72ec8a8
மாதாந்தர வழங்கீடுகளும் அரசாங்க ஆதரவும் அதிகரிக்கப்பட உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீண்டகாலப் பராமரிப்புக்கான (LTC)  தேசிய காப்புறுதித் திட்டமான கேர்ஷீல்டு லைஃப் 2026 ஜனவரி 1 முதல் மேம்படுத்தப்படுகிறது.

அதன் பயனாக அதிகமான மாதாந்தர வழங்கீடுகளும் கூடுதல் அரசாங்க ஆதரவும் கிடைக்கும்.

சந்தா உயர்வுக்கு ஏற்ப கூடுதல் அம்சங்களுடன் அந்தக் காப்புறுதித் திட்டம் மேம்படுத்தப்படுகிறது.

இருப்பினும், நீண்டகாலப் பராமரிப்புடன் தொடர்புடைய மொத்த செலவுகளில் ஒரு சிறிய பகுதிக்கு மட்டுமே பயன்படக்கூடிய அடிப்படைத் திட்டமாக இது தொடரும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“விரிவான நீண்டகாலப் பராமரிப்புக்கும் முதியோர் பராமரிப்புக்கும் உதவக்கூடிய சூழலின் ஒரு பகுதியாக கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தை பொதுமக்கள் பார்க்க வேண்டும். 

“விரிவான ஆதரவுத் திட்டங்ளில் சேராமல், சந்தாத் தொகை செலுத்துவோருக்கு ஏற்றதாக இந்தத் திட்டம் வடிவமைக்கப்படவில்லை,” என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை இணைப் பேராசிரியர் வால்டர் தெசிரா கூறினார்.

கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தின் மாதாந்திர வழங்கீடு 2026ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 4 விழுக்காடு என்னும் வகையில் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு ஆகஸ்ட் 27ஆம் தேதி தெரிவித்தது. தற்போது அது இரண்டு விழுக்காடாக உள்ளது.

சந்தாத் தொகை உயர்வால் ஏற்படக்கூடிய தாக்கத்தைச் சமாளிக்க உதவும் வகையில் அரசாங்கம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு $570 மில்லியனைக் கூடுதலாகச் செலவிட உள்ளது.

அதனால், சந்தா செலுத்த இயலாததால் திட்டத்தின் பலன்களைப் பெற இயலவில்லை என எவரும் கூற இயலாது என்றும் அமைச்சு தெரிவித்து இருந்தது.

இந்தக் காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்துள்ளவர்கள் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் ஆறில் குறைந்தபட்சம் மூன்றில் ஈடுபட இயலாமல் போனால்கூட உதவி கேட்டு காப்புறுதிக் கோரல் விடுக்கலாம்.

குளிப்பது, உடை உடுத்துவது, சாப்பிடுவது, படுக்கையில் இருந்து நாற்காலிக்கு நகர்வது, கழிவறைக்குச் செல்வது, சுற்றி வருவது - ஆகியன அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேர்ஷீல்டு லைஃப் அதற்கு முன்னர் நடப்பில் இருந்த எல்டர்ஷீல்டு காப்புறுதித் திட்டத்திற்கு மாற்றாக அறிமுகம் கண்டது.

நீண்டகாலப் பராமரிப்புக்கான நிதியளிப்பில் காப்புறுதிக்கு இருக்கும் பங்கை வலுப்படுத்த அவ்வாறு அத்திட்டம் மாற்றம் கண்டது.

குறிப்புச் சொற்கள்