உடற்குறைபாட்டுக்கு ஆதரவு வழங்கும் திட்டம்

உடற்குறைபாட்டுக்கு ஆதரவு வழங்கும் திட்டம்

3 mins read
ff23e3dc-17ed-464e-b5c2-929635a4a195
படம்: கெட்டி இமேஜஸ் -

கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தால் பயனடைவோர் யார்? என் பெற்றோரின் சார்பில் நான் கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் பதிவுசெய்து கொள்ளலாமா?

1980இல் அல்லது அதற்குப் பின்னர் பிறந்த சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்தோ, அல்லது 30 வயதான பிறகோ (எது பின்னர் வருகிறதோ) கேர்ஷீல்ட் லைஃப்பில் தாமாகவே இணைக்கப்படுவர். எல்டர்ஷீல்ட் 400 திட்டத்தில் இருந்துகொண்டு, கடும் உடற்குறை இல்லாத 1970க்கும் 1979க்கும் இடையே பிறந்தோர், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் தானாகவே இணைக்கப்பட்டுள்ளனர். கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் தானாகவே இணைக்கப்படாதோர் அதில் பதிவு செய்துகொள்ளலாம். 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்வோர், அடுத்த பத்தாண்டுகளுக்கான காப்புறுதிச் சந்தாக்களைச் செலுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து $4,000 வரை பெறலாம். கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் பதிவுசெய்துகொள்ள உங்கள் பெற்றோரை நீங்கள் ஊக்குவிக்கலாம், வழிகாட்டலாம். உங்களது மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்தியோ, அவர்களது மெடிசேவ் கணக்கில் பணம் நிரப்பியோ, அவர்களது காப்புறுதிச் சந்தாவைச் செலுத்த உதவலாம்.

கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்திற்கான காப்புறுதிச் சந்தா எவ்வளவு? இத்தொகை வரும் ஆண்டுகளில் உயருமா?

வயது, பாலினம், எல்டர்ஷீல்ட் காப்புறுதி கொண்டுள்ளனரா, கேர்ஷீல்ட் திட்டத்தில் இணைந்த ஆண்டு எனப் பல காரணிகளின் அடிப்படையில் கேர்ஷீல்ட் லைஃப் காப்புறுதிச் சந்தா நிர்ணயிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் செலுத்தவேண்டிய காப்புறுதிச் சந்தா வயதாக ஆக உயரும். அரசாங்கம் செய்யும் வழக்கமான மாற்றங்களைப் பொறுத்தும் அது உயரக்கூடும். www.careshieldlife.gov.sg எனும் தளத்தில் உள்ள 'கேர்ஷீல்ட் லைஃப் பிரீமியம் செக்கர்' மின்சேவையைப் பயன்படுத்தி உங்களது காப்புறுதிச் சந்தா எவ்வளவு என்பதை சரிபார்க்கலாம். இப்போது முதல் 2025 வரை, காப்புறுதிச் சந்தா (பொருள், சேவை வரி இல்லாமல்) 67 வயதுக்கு கீழுள்ளோருக்கு ஆண்டுதோறும் 2 விழுக்காடு உயரும். 2025க்குப் பின், காப்புறுதிச் சந்தா உயர்வு தனியார் கேர்ஷீல்ட் லைஃப் மன்றத்தால் குறிப்பிட்ட ஒரு கட்டமைப்பின்படி பரிந்துரைக்கப்படும்.

எவை கடும் உடற்குறையாக கருதப்படுகின்றன? கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தின் மாதாந்திர வழங்குதொகை எவ்வளவு?

வழங்குதொகைக்குத் தகுதிபெற, பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்கள், தாதியர் உட்பட சுகாதார அமைச்சால் சான்றளிக்கப்பட்ட உடற்குறைத் தேர்வாளர்கள் அளிக்கும் சோதனையை நீங்கள் முதலில் மேற்கொள்ளவேண்டும். சாப்பிடுதல், அலம்புதல், கழிவறைப் பயன்பாடு, நடப்பது அல்லது நகர்வது, ஆடை அணிதல், படுக்கையிலிருந்து நாற்காலிக்கு மாறுவது ஆகிய ஆறு அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் மூன்றைச் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் ஒருவர் வழங்குதொகைக்குத் தகுதிபெறுவார். 2021இல் மாதந்தோறும் $612 அளவில் வழங்குதொகை தொடங்கியது. 67 வயது வரை, அல்லது கோரும் தொகை வெற்றிகரமாக கிட்டும்போது (எது முன்னர் வருகிறதோ) வழங்குதொகை ஆண்டுதோறும் அதிகரிக்கும்.

காப்புறுதி சந்தாக்களை எவ்வளவு காலம் செலுத்தவேண்டி வரும்?

கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் இணையும் வயதைப் பொறுத்தே காப்புறுதிச் சந்தாக் காலம் அமையும். 67 வயது வரை அல்லது பத்தாண்டுகளுக்கு (எது பின்னர் வருகிறதோ) காப்புறுதிச் சந்தாவை ஆண்டுதோறும் செலுத்தவேண்டும். ஆனால், திட்டத்திலிருந்து கோரிக்கைத் தொகையை மீட்கும்போது சந்தா தள்ளுபடி செய்யப்படும்.

காப்புறுதி சந்தா தொகையைச் சமாளிப்பதற்கு எவ்வகையான அரசாங்க ஆதரவை நாடலாம்?

உங்களது மெடிசேவ் கணக்கைக் கொண்டோ, குடும்ப உறுப்பினர்களின் மெடிசேவ் கணக்கைக் கொண்டோ, ஆண்டுதோறும் செலுத்தப்படும் காப்புறுதிச் சந்தாத் தொகையை முழுமையாகச் செலுத்தலாம். மேலும், அரசாங்கம் கீழ்காணும் வழிகளில் ஆதரவு வழங்குகின்றது: ­ குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு கேர்ஷீல்ட் லைஃப் அடிப்படைக் காப்பறுதிச் சந்தாத் தொகையில் 30 விழுக்காடு வரை பணவசதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தாத் தொகை நிதி உதவி.  கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணையும் 1979இல் அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களுக்கு $2,500 வரை பங்கேற்றல் ஊக்குவிப்புத் தொகை. பத்தாண்டுகளுக்கு கேர்ஷீல்ட் லைஃப் சந்தாத் தொகைகளைத் தள்ளுபடி செய்வதற்கு இவை பயன்படும். ­ கேர்ஷீல்ட் லைஃப் திட்டத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணையும் மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறையினருக்கு $1,500 கூடுதல் பங்கேற்பு ஊக்கத்தொகை. இவையும், பத்தாண்டுகளுக்கு கேர்ஷீல்ட் லைஃப் சந்தாத் தொகைகளை தள்ளுபடி செய்வதற்குப் பயன்படும். ­ தள்ளுபடிகளும் குடும்ப ஆதரவும் கிடைக்கப்பெற்றும் தங்களது கேர்ஷீல்ட் லைஃப் சந்தாத் தொகையைச் செலுத்த இயலாத சிங்கப்பூரர்களுக்கு காப்புறுதிச் சந்தா செலுத்த கூடுதல் ஆதரவு.