உடற்குறையுள்ளோர் தொழில் தொடங்க உதவும் ‘கேர்சன்ஸ்’

உடற்குறையுள்ளோர் தொழில் தொடங்க உதவும் ‘கேர்சன்ஸ்’

2 mins read
16e4f3f4-458c-4f5c-8b22-f16e87206099
புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் தமது மகன் கேர்ன் பொருள்களை இயந்திரத்தில் அடுக்கி வைப்பதை வில்லியம் டான் (வலம்) பார்வையிடுகிறார். அருகில் புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உணவு விநியோகிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி உடற்குறையுள்ள இளையர்கள் சிறுதொழில் தொடங்க உதவி வருகிறார் 55 வயது வில்லியம் டான்.

அதற்காக ‘கேர்சன்ஸ்’ என்ற லாப நோக்கற்ற அமைப்பை அவர் நிறுவி செயல்பட்டு வருகிறார்.

மிதமான தொடர்புத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தமது 21 வயது மகன் கேர்ன் டானுக்கு உதவ அவர் முதன் முதலில் உணவு விநியோகிக்கும் இயந்திரத்தை வாங்கினார்.

அந்த இயந்திரத்தில் பொருள்களை அடுக்குவதற்கு மகனுக்குப் பயிற்சியளித்தார்.

தற்போது புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள உணவு விநியோகிக்கும் சாதனத்தில் கேர்ன் டான் பொருள்களை உற்சாகமாக அடுக்கி வைப்பதோடு அதனை ஒரு சுயதொழிலாகவும் செய்துவருகிறார். சுயதொழில் லாபத்தைக் கணக்கிடவும் அவர் கற்றுத் தேர்ந்துள்ளார்.

இந்தத் திட்டத்தை மற்ற உடற்குறையுள்ள இளையர்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள ‘கேர்சன்ஸ்’ அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

“என்னுடைய மகன் பேரங்காடியில் பொருள்களை அடுக்கி வைப்பதில் உற்சாகமாக ஈடுபட்டபோது இந்த யோசனை உதித்தது,” என்று வில்லியம் டான் கூறினார்.

பேரங்காடியில் வேலைக்கு முயற்சி செய்தபோது அவரது மகனுக்குத் தோல்வியே ஏற்பட்டது.

தானியக்க விற்பனை இயந்திரத்தைச் சுயமாக நிர்வகித்து சிறுதொழில் தொடங்குவதற்கான திறன்களையும் வாய்ப்புகளையும் உடற்குறையுள்ள இளையர்களுக்கு ‘கேர்சன்ஸ்’ வழங்குகிறது.

திட்டமிடல், செலவு நிர்வாகம் உள்ளிட்ட வர்த்தகத்திற்குத் தேவையான அடிப்படைத் திறன்களிலும் அது பயிற்சியளிக்கிறது.

இதில் சேர விரும்புவோர் 3,900 வெள்ளி செலுத்த வேண்டும். பயிற்சி, ஆலோசனை, உணவு விநியோகிக்கும் இயந்திரத்திற்கான ஆறு மாத குத்தகை ஆகியவற்றுக்கான செலவுகள் இதன் மூலம் ஈடுகட்டப்படுகிறது. குத்தகைக் காலம் முடிந்ததும் இயந்திரத்தை 1,000 வெள்ளிக்கு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்