ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் உள்ள பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் உதவி கிடைக்கவுள்ளன.
சிறப்புத் தேவையுடையவர்களைக் கவனித்துவரும் பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் உதவி அளிப்பதற்கான திட்டம் ஹார்ட்பீட்@பிடோக் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அறிவிக்கப்பட்டது.
‘கேர்கிவிங் கம்போங்@ஈஸ்ட் கோஸ்ட் ஃபெஸ்டிவல்’ எனும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தொடங்கிவைத்தார்.
இதன் முதற்கட்டமாக, $300,000 மதிப்புள்ள பற்றுசீட்டுகளை வழங்க கிராப் நிறுவனம் முன்வந்துள்ளது.
பதிவுசெய்யப்பட்ட தகுதிபெறும் பராமரிப்பாளர்களுக்கு $100 கிராப் பற்றுசீட்டு வழங்கப்படும். அவர்களின் மளிகைப் பொருள், உணவு, பயணச் செலவுகளுக்குப் பற்றுசீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
இது, ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள கிட்டத்தட்ட 300 பராமரிப்பாளர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான அடித்தள ஆலோசகர்கள் ஜெசிக்கா டான் சூன் நியோவும் ஷெரல் சானும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி கம்போங் சாய் சீ பிரிவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த துணை அமைச்சர் டான், “ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி குடியிருப்பாளர்களின் நலனில் நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“குறிப்பாக, பராமரிப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பல. எங்கள் குடியிருப்பாளர்களைக் கவனித்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதி இது. அவர்கள் தனித்துவிடப்படவில்லை என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
மூத்த துணை அமைச்சர் டானுடன் சிங்கப்பூர் ஆயுதப்படையின் முன்னாள் துணைத் தளபதி கோ பெய் மிங்கும் காணப்பட்டார்.
அதே நாளில் புதிய பொங்கோல் குழுத்தொகுதியில் பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்பட்ட அவர், கம்போங் சாய் சீ சமூக மன்ற மேலாண்மை குழுத் தலைவர் என்ற முறையில் பிடோக்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.
“பொங்கோல் குழுத்தொகுதியிலும் சில அடித்தளப் பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். 2007லிருந்து கம்போங் சாய் சீ சமூகப் பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். நான் சாய் சீயில்தான் வளர்ந்தேன். நான் வளர்ந்த இடத்தில் குடியிருப்பாளர்களுக்கு திருப்பி உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி,” என்று சொன்ன அவர், தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு தம்மால் பதிலளிக்க இயலாது என்றார்.