இணைய வர்த்தக நிறுவனமான ‘கேரசல்’ தனது வட்டார அலுவலகங்களில் பணியாற்றிய 76 ஊழியர்களை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) பணி நீக்கம் செய்தது. அந்நிறுவனம் டிசம்பர் 6ஆம் தேதி காலை நடத்திய கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பிறகு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
சிங்கப்பூர் உட்பட அவ்வட்டாரத்தில் செயல்படும் அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 7 விழுக்காட்டினர் இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு ‘கரேசல்’ நிறுவனத்தின் சில வர்த்தக குழுக்களில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் ஒருசில ஊழியர்களை வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எங்கள் குழுவின் நீண்டகால நிலைத்தன்மையையும் செயல்பாட்டுத் திறனையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என ‘கேரசல்’ நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதுகுறித்து அவர்களின் துறைத் தலைவர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்புத் தொகுப்பாக அவர்கள் பணியாற்றிய ஆண்டுகள் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு ஒரு மாதச் சம்பளம் எனும் கணக்கில் குறைந்தது மூன்று மாதச் சம்பளம் வழங்கப்படுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.