லஞ்சம் வாங்கியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தொடர்பில் மலாய்-முஸ்லிம் சமூக சுயஉதவிக்குழுவான யாயாசான் மெண்டாக்கியின் முன்னாள் மேலாளர் ஒருவருக்கு ஈராண்டுகள் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்கத் தகவல் தொழில்நுட்ப மேலாளராக இருந்த 51 வயது திரு ஸுல்கிஃப்லி காதர் $1,000க்கும் மேல் மதிப்புடைய மடிக்கணினியை லஞ்சமாகப் பெற முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். மெண்டாக்கிக்கான ஒப்பந்தமொன்றுக்கு ஏ-ஸ்பீட் எனும் நிறுவனத்தின் ஏலக்குத்தகையை ஏற்றுக்கொள்வதற்கு வெகுமதியாக அதன் ஊழியர் ஒருவரிடமிருந்து மடிக்கணினியை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மலேசியரான அவருக்கு ஜூலை 30ஆம் தேதி நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி குற்றச்சாட்டின் தொடர்பில் பொருத்தமான ஆதாரம் ஏதேனும் கிடைத்தால் அவர் மீது வழக்கு தொடரமுடியும்.
தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகம் அதுபற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு விவரம் தந்தது. இருப்பினும் மேல் விவரங்களை அது வெளியிடவில்லை.
திரு ஸுல்கிஃப்லி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதிக்கும் மே 8ஆம் தேதிக்கும் இடையில் மூன்று தருணங்களில் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.