நிறுவன இயக்குநர், ஐந்து மேலாளர்கள் மீது ஊழல், பண மோசடி, நம்பிக்கைத் துரோக மோசடி குற்றச்சாட்டுகளின்

நிறுவன இயக்குநர், ஐந்து மேலாளர்கள் மீது ஊழல், பண மோசடி, நம்பிக்கைத் துரோக மோசடி குற்றச்சாட்டுகளின்

2 mins read
7c97f60e-005f-4245-afcf-3ffc0c045726
குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் (இடமிருந்து) லோய் ஹுவீ கியட், ஷின் ஹியுங்ஜுன், சியோ மியோங்சூ, புவா பன் ஷோங். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பண மோசடி, நம்பிக்கைத் துரோக மோசடி, ஊழல் உட்பட பல குற்றங்களுக்காக செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 21) ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பிப்ரவரி 2018 முதல் ஏப்ரல் 2022 வரை இந்தக் குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில், 60 வயது சிங்கப்பூரரான லோய் ஹுவீ கியட், கெப்பிட்டல் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் ஆசியானா கெப்பிட்டல் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்தார்.

டோங்கா நிறுவனத்துடன் கெப்பிட்டல் மற்றும் ஆசியானா நிறுவனங்களின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காக, டோங்கா ஜியோலோஜிக்கல் இன்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு மேலாளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக அவர் மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

தென்கொரியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 42 வயது ஷின் ஹியுங்ஜுன், டோங்கா நிறுவனத்தின் திட்ட மேலாளராகவும் ஏலக் குத்தகை மேலாளராகவும் பணியாற்றினார்.

தென்கொரியர்களான 46 வயது கிம் டோங் ஹுவி, 49 வயது வூ கியோங்ஜின் ஆகியோர் டோங்கா நிறுவனத்தில் கட்டுமான மேலாளர்களாக இருந்தனர்.

52 வயது தென்கொரியரான சியோ மியூங்சூ அதே நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருந்தார்.

ஷின், சியோ, கிம் மற்றும் வூ ஆகியோர் லோய்யிடமிருந்து $143,000 லஞ்சமாகப் பெற்றதாக ஏப்ரல் 21ஆம் தேதியன்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

லஞ்சமாகப் பெற்ற $38,000 பணத்தைத் தமது மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததன் மூலம் அந்த ஊழல் பலன்களை கிம் மறைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், $34,000க்கும் அதிகமான மதிப்புள்ள பழைய ‘ஸ்கிராப் ரோலர் பிட்’களை ஷின் நேர்மையற்ற முறையில் கையாடல் செய்து தமது சொந்த பயன்பாட்டிற்காக மாற்றியதாக அதிகாரிகள் கூறினர். இந்த ‘ரோலர் பிட்’களின் பொருள்களைத் தொழில்துறை கருவிகளாக மாற்ற முடியும்.

2022, 2023ஆம் ஆண்டுகளில் இந்தக் குற்றங்கள் நடந்தபோது சாங் யூ கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளராக இருந்த மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 50 வயது புவா பன் ஷோங்கின் உதவியுடன் ஷின் இதைச் செய்தார்.

மொத்தம் $38,000 லஞ்சம் பெற்றதாக நான்கு குற்றச்சாட்டுகளும் குற்றச் செயல்களின் மூலம் பெற்ற பலன்களை மறைத்ததாக ஒரு குற்றச்சாட்டும் கிம் மீது சுமத்தப்பட்டன.

$42,000 லஞ்சம் பெற்றதற்காக சியோ மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

$16,000 தொகையை லஞ்சமாகப் பெற்றதாக வூ மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் நம்பிக்கைத் துரோக மோசடி செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் புவா மீது சுமத்தப்பட்டது.

ஷின், வூ, கிம் மற்றும் சியோ ஆகியோரின் வழக்குகள் ஏப்ரல் 28ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

புவா மற்றும் லோய்யின் வழக்குகள் மே மாதத்தில் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்லஞ்சம்குற்றச்சாட்டு