சிங்கப்பூர்ச் சொத்துச் சந்தையில் சட்டவிரோதம் என்று கருதப்படும் ‘99-1’ என்ற சொத்து விற்பனை நடைமுறை தொடர்பில் ஹட்டன்ஸ் ஏஷியா (Huttons Asia) சொத்து நிறுவனம் உள்பட சான் சீ ஹோ என்ற சொத்து முகவர்மீது ஒரு தம்பதியர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
கிளமெண்டி வட்டாரத்தின் புரூக்வேல் பகுதியில் கீ ரெசிடென்சஸ் என்ற கூட்டுரிமை வீட்டை $1.38 மில்லியனுக்கு 2021ஆம் ஆண்டு சாங் ஹன் மிங், லியூ யூ டொங் தம்பதியர் வாங்கினர்.
அவர்கள், சட்டவிரோதம் என்று கருதப்படும் ‘99-1’ என்ற நடைமுறை மூலம் $406,285 முத்திரை வரியைச் செலுத்த தவறியதாகக் கூறப்படுகிறது. தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்காக தம்பதி ஹட்டன்ஸ் ஏஷியா, சான் சீ ஹோ என்ற சொத்து முகவர், பெர்டினென்ட் லா ஆகியவைமீது இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.
சொத்து வாங்கும் தம்பதியரில் ஒருவர் வீட்டை முழு விலை கொடுத்து வாங்கிய பின் அதில் 1 விழுக்காட்டை மற்றவரிடம் விற்பது ‘99-1’ நடைமுறை என்று அறியப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் சொத்துக்கான முத்திரை வரி குறைகிறது.
அத்தகைய ‘99-1’ நடைமுறை மூலம் சொத்துகள் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டால் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.
அந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, 26 வயதில் அப்போது இருந்த சீன நாட்டவரான சாங்கும் மாணவியாக இருந்த லியூவும், சான் என்ற சொத்து முகவர் மூலம் கூட்டுரிமை வீட்டை வாங்க முற்பட்டனர்.
அப்போது வீட்டை வாங்குவோருக்கான கூடுதல் முத்திரை வரியைக் குறைக்க ‘99-1’ என்ற நடைமுறையைப் பயன்படுத்தும்படி சான் அறிவுறுத்தினார். அது சட்டபூர்வமானது என்றும் முறையானது என்றும் தம்பதியரிடம் சான் கூறினார்.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லியூவுக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை கிடைத்தது. அவர் சிங்கப்பூரராக முதன்முறை வீடு வாங்குவதால் கூடுதல் முத்திரை வரி செலுத்தவேண்டிய தேவையிருக்காது என்ற சொத்து முகவர் சான், கூட்டுரிமை வீட்டை லியூ முழு பணத்தைக் கொடுத்து வாங்கிய பின் சாங்கிற்கு ஒரு விழுக்காட்டு பங்கை விற்கும்படி அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
சாங் அச்சமயத்தில் வேலை செய்துகொண்டிருந்ததால் கூடுதல் கடனையும் பெற முடியும் என்று சான் வாக்குறுதியளித்தார்.
தொடக்கத்தில் தயங்கிய தம்பதியர் 2021ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி $1.38 மில்லியனுக்குக் கூட்டுரிமை வீட்டை வாங்கி இரண்டு வாரங்கள் கழித்து ஒரு விழுக்காடு அதாவது $13,770 மதிப்புள்ள பங்கை சாங்கிற்கு விற்றார்.
எனினும், கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் முத்திரை வரி சட்டத்தின்கீழ் சட்டவிரோதமாக முத்திரை வரி செலுத்துவதைத் தவிர்த்ததாகத் தம்பதிமீது $406,285 அபராதம் விதித்தது.

