தேசிய சேவை ஆற்றத் தவறிய ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

தேசிய சேவை ஆற்றத் தவறிய ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

2 mins read
89ee1356-e655-4429-ac8b-0be9097781c7
எட்மண்ட் யாவ் ஜி ஹாய்யுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பிறந்த சிறிது காலத்திலேயே இந்தோனீசியக் குடியுரிமை பெற்ற ஒருவர், சிங்கப்பூரில் கட்டாயத் தேசிய சேவை ஆற்றத் தவறியதற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

எட்மண்ட் யாவ் ஜி ஹாய் என்ற அவர், 1997ஆம் ஆண்டு ஜனவரியில் முழுநேரத் தேசிய சேவையில் சேரத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, சிங்கப்பூர்க் குடியுரிமையின் உரிமைகளையும் சலுகைகளையும் பயன்படுத்தாதவர்கள் மட்டுமே 21 வயதை அடையும்வரை தேசிய சேவையிலிருந்து விலக்கு பெற முடியும். அதன்பிறகு அவர்கள் தங்கள் சிங்கப்பூர்க் குடியுரிமையைத் துறக்க வேண்டும்.

விசாரணையின்போது, யாவ் இந்தோனீசியக் குடியுரிமை பெற்றிருந்ததால் சிங்கப்பூர் தேசிய சேவை ஆற்றுவதை சட்டம் தடுப்பதாக அவர் நம்பியதாக தற்காப்புத் தரப்பு வாதிட்டது. ஏனெனில், இந்தோனீசியச் சட்டம் அந்நாட்டு மக்களை வெளிநாட்டு ராணுவத்தில் சேருவதைத் தடை செய்கிறது.

யாவ் சிங்கப்பூரில் தேசிய சேவை செய்திருந்தால் அவர் தம் இந்தோனீசியக் குடியுரிமையை இழந்திருப்பார் என்றும் தற்காப்புத் தரப்பு கூறியது.

இருப்பினும், சிங்கப்பூரில் தொடக்கப் பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரை கல்வி பயின்ற யாவ், தமது வசதிக்கேற்ப சட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி அரசுத் தரப்பு அந்த வாதங்களை நிராகரித்தது.

அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்தக் குற்றச்சாட்டைத் தவிர, யாவ் சிங்கப்பூருக்கு வந்தபோது 14 முறை தமது சிங்கப்பூர் கடப்பிதழைக் குடிநுழைவு அதிகாரியிடம் சமர்ப்பிக்கத் தவறிய குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார். விசாரணை இடம்பெறுவதால் இந்த வழக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்