புதிய தனித்தொகுதியின் வாக்களிப்பு வட்டாரத்தில் ‘ஒரே வாக்காளர்’: விசாரணை தொடர்கிறது

2 mins read
0addc0ff-458b-44dd-9ea1-ea36760a5001
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதி. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியின் வாக்களிப்பு வட்டாரம் ஒன்றில் ஒரே ஒரு வாக்காளர் இருப்பதாகக் கூறப்படுவதன் தொடர்பில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்படும் அதன் பரிந்துரை அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ‘ஒரே வாக்காளர்’ விவகாரம் தலைதூக்கியது.

“ஒரே ஒரு வாக்காளர் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. தற்போதைக்கு எங்களால் மேல்விவரங்கள் வழங்க முடியாது,” என்று ஆணையம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறு ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில், புதிய தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியின் ஈஸ்ட் கோஸ்ட் 42 வாக்களிப்பு வட்டாரத்தின்கீழ் ஒரு வாக்காளர் மட்டுமே இடம்பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி வாக்காளர் பதிவேடுகளைக் கொண்டு அறிக்கை வரையப்பட்டது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் ஈஸ்ட் கோஸ்ட் 42 வாக்களிப்பு வட்டாரத்தில் எந்த குடியிருப்பாளரும் இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அப்போது அந்தப் பகுதியில், கட்டி முடிக்கப்படாத நான்கு தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடமைப்பு வளர்ச்சிக் கழகத் திட்டங்கள், ஒரு தொழில்துறைப் பேட்டை ஆகியவை மட்டுமே இருந்தன.

அந்த நான்கு பிடிஓ திட்டங்களில் மூன்று இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. தெம்பனிஸ் கிரீன்எமரல்ட் (Tampines GreenEmerald) பிடிஓ திட்டம் அண்மையில்தான் கட்டி முடிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 23ஆம் தேதிதான் முதன்முறையாக அதன் குடியிருப்பாளர்கள் சிலர் வீட்டுச் சாவியைப் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்