‘ரிசோட்ஸ் வோர்ல்டு’ செந்தோசாவில் இருக்கும் சூதாட்டக்கூடத்தில் உதவியாளராகப் பணிபுரிந்தவர் கிட்டத்தட்ட $55,000 மதிப்புள்ள சூதாட்டச்சில்லுகளைத் தன்னுடைய காற்சட்டைக்குள் ஒரு காகிதத்தில் மறைத்து திணித்துள்ளார்.
அவருடைய நடவடிக்கையில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க S$37,000 மதிப்புள்ள சில்லுகளைப் பணமாக மாற்ற உதவுவதற்காக இரு மாதுகளைத் தனது மோசடித் திட்டத்திற்குள் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றத்திற்காகத் தாய்லாந்தைச் சேர்ந்த 35 வயது ஓம்னகில் தனகோர்னுக்கு ஓர் ஆண்டு, மூன்று வாரச் சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடி, மோசடி மூலம் கிடைத்த வருமானத்தை மாற்றுவதற்காக மற்றவர்களைக் குற்ற செயலில் ஈடுபடத் தூண்டுவது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மேலும் இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

