$10,000க்கும் அதிகமான தொகை தொடர்புடைய சூதாட்டக்கூடக் குற்றங்களுக்காக வியாழக்கிழமை (நவம்பர் 19) எழுவர்மீது நீதிமன்றத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
27 முதல் 39 வயதுக்குட்பட்ட சந்தேகப் பேர்வழிகள், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு வெவ்வேறு மோசடி, சூதாட்ட வில்லை திருட்டு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டதாகப் புதன்கிழமை (நவம்பர் 18) காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மார்ச் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, 30, 31 வயதுடைய இருவர் கூட்டுச் சேர்ந்து பிற வாடிக்கையாளர்களின் வெற்றிப் பந்தயத் தொகையையும் வில்லைகளையும் ஏமாற்றிப் பெற்றனர். இருவரும் தனித்தனியாகவும் மோசடியில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் மொத்தமாக $3,000 சுருட்டினார்.
ஏப்ரல் 26ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை, 27 வயது ஆடவர் ஒருவர் 25 முறை பிற சூதாட்டக்காரர்களின் வெற்றிப் பந்தயங்களுக்கு உரிமை கோரியதுடன் கிட்டத்தட்ட $2,300 பெற்றார்.
மே 17, 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், 28 வயது ஆடவர் ஒருவர் மூன்று முறை $345 மதிப்புள்ள பிறரின் வெற்றித் தொகையைப் பெற்றதுடன், ஒன்பது முறை $295 மதிப்புள்ள வில்லைகளைத் திருடினார். ஜூன் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, 32 வயது ஆடவர் ஒருவர் 21 முறை $250 மதிப்புள்ள வில்லைகளைத் திருடி, $20 வெற்றிப் பந்தயத்தை ஏமாற்றினார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி, 31 வயது ஆடவர் ஒருவர் இருமுறை தாமதமாகப் பந்தயம் கட்டி $1,400 மதிப்புள்ள வில்லைகளையும் பிறரது $700 வெற்றிப் பந்தயத்தையும் மோசடியாகப் பெற்றார். ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, 39 வயது ஆடவர் 13 முறை மோசடி செய்து ஏறத்தாழ $1,980 பெற்றதுடன், மேலும் $200 பெற முயற்சி செய்தார். மேற்குறிப்பிட்ட தகவல்கள் காவல்துறையின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
சம்பவங்களைக் கண்டறிந்த சூதாட்டக்கூட நடத்துநர்கள் அளித்த தகவலின்பேரில், அறுவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
