புதுப்பிக்கப்படாத ஒரு சட்டத்தின் காரணமாக, சிங்கப்பூரின் இரண்டு சூதாட்டக் கூடங்கள், ஏப்ரல் மற்றும் மே 2024க்கு இடையில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டதை விட, சுமார் $4.4 மில்லியனை அதிகமாக வசூலித்துள்ளன.
சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக் கூடங்களுக்குள் நுழைய வேண்டுமானால், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள் ஒருநாள் நுழைவுத் தீர்வையாக $100 அல்லது வருடாந்திர நுழைவுத் தீர்வையாக $2,000 செலுத்த வேண்டும்.
சூதாட்டக் கூடக் கட்டுப்பாடு (நுழைவுத் தீர்வைகளின் மாறுபாடு) சட்டம் 2019 நடப்புக்கு வந்த பிறகு, இந்தத் தீர்வைகள், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று முறையே $150 ஆகவும் $3,000 ஆகவும் உயர்த்தப்பட்டன.
ஆனால் இந்தச் சட்டம் ஏப்ரல் 3, 2024 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
அதன் காலாவதித் தேதியை உள்துறை அமைச்சு கவனிக்காமல் விட்டதால், ஏப்ரல் 4 முதல் மே 7 வரை சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான நுழைவுத் தீர்வைகளைச் சூதாட்டக் கூடங்கள் வசூலித்தன.
ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சூதாட்டக் கூடக் கட்டுப்பாடு திருத்த மசோதா தொடர்பான செய்திக்குறிப்பில் உள்துறை அமைச்சு தனது தவற்றைச் சுட்டிக் காட்டியது.
ஐந்தாண்டு காலத்திற்கு அப்பால் அதிக நுழைவுத் தீர்வைகளை எப்போதும் கட்டிக்காக்க விரும்புவதாக உள்துறை அமைச்சு கூறியது. இந்தத் தீர்வைகள் சாதாரண மற்றும் சூதாட்டப் பித்தைத் தடுக்க ஒரு சமூகப் பாதுகாப்பாகச் செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டது.
ஆனால் 2019 சட்டத்தின் காலாவதி காலத்தை அது கவனிக்கவில்லை என்று அமைச்சு கூறியது. இதனால் நுழைவுத் தீர்வை ஏப்ரல் 4, 2024 அன்று குறைந்த விகிதத்துக்குத் திரும்பியது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாதிருக்க நாங்கள் எங்கள் நடைமுறைகளைக் கடுமையாக்கி உள்ளோம்,” என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
தினசரி மற்றும் வருடாந்தரத் தீர்வைகளை அதிக விகிதங்களுக்கு மீட்டெடுக்க மே 8 அன்று ஒரு புதிய உத்தரவை அமைச்சு அறிமுகப்படுத்தியது.
ஒரு மாத கால அவகாசத்தின்போது வசூலிக்கப்படும் அதிக நுழைவுத் தீர்வைகளைச் சரிபார்க்க வேண்டும் என்பது சூதாட்டக்கூடக் கட்டுப்பாடு (திருத்தம்) மசோதாவின் நோக்கங்களில் ஒன்று.
ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சு, 2023ஆம் ஆண்டில் சூதாட்டக் கூடங்களுக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை சிங்கப்பூர் பெரியவர்களில் 3 விழுக்காடு மட்டுமே என்று கூறியது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களிடையே சூதாட்டப் பழக்கம், சூதாட்டப் பித்து ஆகியவற்றின் விகிதங்கள் குறைவாகவும் நிலையானதாகவும், சுமார் 1 விழுக்காடாக உள்ளது என்று அமைச்சு விளக்கியது.
“நுழைவுத் தீர்வையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. எங்கள் சமூகப் பாதுகாப்பு முறைகளின் செயல்திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும்போது மாற்றங்களைச் செய்வோம்,” என்றும் அமைச்சு தெரிவித்தது.