சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் (COE) புதன்கிழமை (டிசம்பர் 4) நடைபெற்ற ஏலத்தில் 4.6 விழுக்காடு ஏற்றம் கண்டது.
இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற கடைசி ஏலத்தில் $10,000 குறைந்த ‘ஏ’ பிரிவுக்கான கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது.
அதேநேரம், பெரிய கார்களுக்கான கட்டணம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டது.
எல்லாப் பிரிவுகளையும் ஒப்பிடுகையில், ஆக அதிகமாகக் கட்டணம் குறைந்தது ‘டி’ பிரிவில் இடம்பெற்று உள்ள மோட்டார் சைக்கிள்களுக்குத்தான்.
நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற முந்திய ஏலத்தில் $8,669ஆக இருந்த அந்தக் கட்டணம், புதன்கிழமை ஏலத்தில் 9.1 விழுக்காடு சரிந்து $7,878 ஆனது.
சிறிய, குறைந்த ஆற்றல் கொண்ட கார்களும் மின்சார வாகனங்களும் இடம்பெற்று உள்ள ‘ஏ’ பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் முந்திய ஏலத்தைக் காட்டிலும் 4.6 விழுக்காடு அதிகரித்து $94,000 என முடிவடைந்தது.
நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் அந்தக் கட்டணம் $89,999ஆக இருந்தது.
கடந்த ஒன்றரை மாதங்களில் சிறிய கார்களுக்கான கட்டணம் இப்போதுதான் ஏற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து மூன்று ஏலங்களில் அது சரிவு கண்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவின் கட்டணம் $105,081 என்பதில் இருந்து $103,010 என்று 2 விழுக்காடு சரிந்தது. இரண்டு மாத காலத்தில் நான்காவது தொடர் சரிவு அது.
பொது வாகனங்களுக்கான ‘இ’ பிரிவிலும் 3.3 விழுக்காடு சரிவு காணப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்னர் $107,501ஆக முடிவடைந்த அதன் சிஓஇ, புதன்கிழமை $104,001க்கு இறங்கியது.