லிட்டில் இந்தியாவில் ஜூன் 24ஆம் தேதி தம் பூனையைத் தொலைத்து தவித்த உரிமையாளர்களுக்கு ஜூலை 5ஆம் தேதி அது கண்டுபிடிக்கப்பட்டதாக நற்செய்தி வந்தது.
11 நாள்கள் அல்லும் பகலும் தம் நண்பர்களுடன் விடாமல் தேடிவந்த அவர்கள் ஒருவழியாக மனநிம்மதியடைந்தனர்.
“எங்கள் பூனை ‘ஏஷ்’ எப்படியாவது திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதால் நான் வேலையிலிருந்து விடுப்பு எடுத்து, என் சகோதரி ஷேர்லினுடன் அன்றாடம் இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரை தேடினேன். எங்கள் நண்பர்களும், எங்களுக்கு முன் ஏஷை வளர்த்தவரும் தேட உதவினர்,” என்றார் பூனையின் உரிமையாளர் மேத்தியூ.
லிட்டில் இந்தியாவில் பணியாற்றும் இந்தியப் பெண் ஒருவர், தொலைந்த பூனையை தாம் கண்டதாக ஜூலை 5ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு மேத்தியூவையும் ஷேர்லினையும் தொடர்புகொண்டார்.
பூனையை ஹேம்ப்ஷயர் சாலையிலுள்ள நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமையகத்தில் கண்டதாக அவர் கூறினார். தொலைந்த பூனை பற்றிய தகவலை அவர் ஷேர்லினிடமிருந்து பெற்றிருந்ததால் அவரால் அதை அடையாளம் காண முடிந்தது.
உடனடியாக அங்கு விரைந்துசென்ற மேத்தியூவும் ஷேர்லினும் பூனையைப் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
உடனடியாக கால்நடை மருத்துவரிடம் பூனையை அழைத்துச் சென்ற அவர்கள், பூனையின் எடை குறைந்திருப்பினும் நலமாக இருப்பதை அறிந்ததும் நிம்மதியடைந்தனர்.
“அத்தனை நாள் ஏஷ் உணவுக்கும் தண்ணீருக்கும் என்ன செய்தது என எங்களுக்குத் தெரியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“அந்தப் பெண்ணுக்கும் பூனையைத் தேடிய அனைவருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். நிலப் போக்குவரத்து ஆணையக் கட்டடத்தினுள் நுழைய எங்களுக்கு அனுமதி இல்லாததால் அங்கு எங்களால் தேட முடியவில்லை,” என்றார் மேத்தியூ.
ஏஷுக்கு ஒன்றரை வயதுதான். ஏஷையும் அதன் சகோதரி எம்மாவையும் சென்ற ஜூலை மாதம் மேத்தியூவும் ஷேர்லினும் தத்தெடுத்தனர்.
‘நிம்மதியாகத் தூங்கிய நாளில்லை’
ஜூன் 24ஆம் தேதி மாலை தாம் ஏஷுடன் கால்நடை மருத்துவரிடமிருந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அப்பூனை தொலைந்துபோனதாகக் கூறியிருந்தார் மேத்தியூ.
கம்போங் ஜாவாவுக்கும் ரோவெல் சாலைக்கும் இடையே கிளைவ் ஸ்திரீட் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது தாம் வைத்திருந்த பெட்டி ஒன்றிலிருந்து தம் பூனை வெளியே தாவியிருக்கும் என எண்ணியிருந்தார் மேத்தியூ.
பூனை தொலைந்தபின் பதைபதைத்த மேத்தியூவும் ஷேர்லினும் லிட்டில் இந்தியா முழுவதும் தங்கள் பூனை பற்றிய தகவல்களைச் சுவர்களில் ஒட்டியிருந்தனர்; அன்றாடம் சுவரொட்டிகளைக் கடைகளிடமும் வழிப்போக்கர்களிடமும் கொடுத்து வந்தனர்.
பூனையைக் கண்டுபிடிப்பவருக்கு $2,000 வெகுமதி வழங்கப்படும் என அந்தச் சுவரொட்டியில் அவர்கள் குறிப்பிட்டும் இருந்தனர்.
சமூக ஊடகங்களிலும் அவர்கள் தகவல்களைப் பதிவேற்றியிருந்தனர். பூனை நலக் குழுக்களின் ஊடகப் பக்கங்களிலும் தகவல் பகிர்ந்திருந்தனர்.
பூனைக்கு அன்றாடம் கட்டாயம் FIP தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதால் நாள் செல்ல செல்ல பூனையின் நலன் குறித்து அவர்களின் வருத்தமும் மனவுளைச்சலும் கூடின.
முதுகில் காயம்பட்டுள்ள அந்தப் பூனையைக் கண்டால் மெதுவாக, சத்தம் போடாமல் அதனைப் பின்தொடர்ந்தபடியே தம்மை அழைக்கவும் என்றும் மேத்தியூ கேட்டுக்கொண்டிருந்தார்.
மேத்தியூ பதற்றத்துடன் தம் கடைக்கு வந்து, தொலைந்த பூனை பற்றிய சுவரொட்டி தந்ததை நினைவுகூர்ந்த சங்கம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் இலியாஸ், பூனை திரும்பக் கிடைத்தது எனக் கேள்விப்பட்டபோது மகிழ்ச்சி தந்ததாகக் கூறினார்.
ஒரு நல்ல விஷயத்துக்காக லிட்டில் இந்தியா சமூகம் ஒன்றுபட்டதை இச்சம்பவம் பறைசாற்றுகிறது.

