ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை மூன்று மாதங்கள் ஏலத்துக்கு விடப்படும் வாகனங்களுக்கான ‘சிஓஇ’ சான்றிதழ்கள் 0.2 விழுக்காடு உயர்த்தப்பட்டு 19,085 என்ற எண்ணிக்கையை எட்டும்.
அக்காலகட்டத்தில், முடிந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ‘ஏ’ பிரிவு வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 7,434 சான்றிதழ்களைவிட அதன் எண்ணிக்கை 4 விழுக்காடு குறைந்து 7,134 என்று இருக்கும். இந்த விவரங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) அறிவித்தது.
அதன்படி, வரப்போகும் இரண்டு மாதங்களில் அந்த பிரிவுக்கான ஒவ்வோர் ஏலங்களிலும் 50 வாகனங்களுக்கான சான்றிதழ்கள் குறையும் என்று தெரிகிறது.
சிறிய, குறைந்த சக்திவாய்ந்த வாகனங்களுக்கு ‘ஏ’ பிரிவு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பெரிய சக்திநிறைந்த வாகனங்களுக்கான ‘பி’ பிரிவில், அடுத்த மூன்று மாதங்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு உயர்த்தப்பட்டு, 5,527 சான்றிதழ்களை எட்டும். தற்போது 5,205 முதல் 5,527 என்ற எண்ணிக்கையில் அப்பிரிவுக்கான ஒதுக்கீடு உள்ளது.
அதற்கிடையே ‘இ’ எனப்படும் பொதுப் பிரிவின் சான்றிதழ்களுக்கான ஒதுக்கீடு 0.2 விழுக்காடு குறைந்து 1,523 என்று அச்சமயம் இருக்கும். தற்போது அந்தப் பிரிவின் எண்ணிக்கை 1,526 சான்றிதழ்கள் என்று இருக்கிறது.

