சிங்கப்பூரில் ‘ஏ’ பிரிவு வாகன உரிமச் சான்றிதழுக்கான (சிஓஇ) தொகை புதன்கிழமை (ஏப்ரல் 22) 4.2 விழுக்காடு உயர்ந்து $123,010ஐ எட்டியது.
அதன்படி, ‘பி’ பிரிவு வாகனத்தின் $121,001 சிஓஇ தொகையைவிட ‘ஏ’ பிரிவு உரிமத் தொகை ஏற்றம் கண்டுள்ளது. பிப்ரவரி மாதக் கடைசி ஏலத்தில் நடந்ததுபோல கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாம் முறையாக இது நிகழ்ந்தது.
ஏப்ரல் 8ஆம் தேதி நடந்த ‘ஏ’ பிரிவின் சிறிய வாகனங்களுக்கான ஏலத்தில் சிஓஇ சான்றிதழின் தொகை $118,000 என்று இருந்தது.
பெரிய வாகனங்களுக்கான சான்றிதழின் தொகை கடந்த ஏலத்தைப்போலவே $121,01 என்று நிலைத்திருந்தது.
பொதுப்பிரிவு (இ) வாகனக் கட்டணம் 3.3 விழுக்காடு உயர்ந்து $125,002 என்ற தொகையை எட்டியது. அப்பிரிவின் கடைசி ஏலக் கட்டணம் $121,001 என்று இருந்தது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவில் சிஓஇ சான்றிதழ் கட்டணம் 4.4 விழுக்காடு உயர்ந்து இரு வாரங்களுக்கு முன்பிருந்த $80,001ல் இருந்து $83,501 என்று ஏற்றமடைந்தது.
‘டி’ பிரிவின் மோட்டார்சைக்கிள்களுக்கான கட்டணம் 7.1 விழுக்காடு குறைந்து, $10,000ல் இருந்து $9,290 என்ற நிலையை அடைந்தது.

