கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரி, விட்லி சாலை வளாகத்திலிருந்து பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்துக்கு அருகில் இடமாறும் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அறிவிக்கப்பட்டது.
புதிய வளாகத்தில் கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரி 2034ஆம் ஆண்டு முதல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய இடமாற்றத்துக்கு வழிவிடும் வகையில், கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரி மற்றும் அதன் முக்கிய பங்குதாரர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் துணைப் பிரதமரும் பொங்கோல் குழுத்தொகுதியின் அடித்தள ஆலோசகருமான கான் கிம் யோங்.
இந்த முடிவு ஓர் எளிய இடமாற்றம் மட்டுமன்று என்று திரு கான் குறிப்பிட்டார்.
“மாணவர்கள் கற்றுக்கொள்வதைப் பள்ளிக்கு அப்பாற்பட்ட ஒரு சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் உபயோகிக்க வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவாகும்,” என்றார் அவர்.
ஒரு பெரிய ஆய்வகமாக வடிவமைக்கப்பட்ட பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், பகிரப்பட்ட மின்னிலக்க உள்கட்டமைப்புடன் இயற்பியல் இடங்களை ஒருங்கிணைக்கிறது என்று திரு கான் விளக்கினார்.
“அதனால் துடிப்பான இந்த வட்டாரச் சமூகத்துக்கு ஒரு தொடக்கக் கல்லூரியின் வருகை பங்களிக்கிறது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அவருடன் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு, ‘ஜேடிசி கார்ப்பரேஷன்’ கழகம், தேசியப் பூங்காக் கழகம், தேசிய இளையர் மன்றம், ‘பாத்லைட்’ பள்ளி, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகிய பங்குதாரர் அமைப்புகள் கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இதன்வழி திட்ட ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு முயற்சிகள் முறைப்படுத்தப்படும்.
இடமாற்றத்துக்குப்பின் கத்தோலிக்கத் தொடக்கக்கல்லூரி சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் அருகில் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தொடக்கக் கல்லூரி முடித்து பல்கலைக்கழகம் செல்ல விரும்பும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு தக்க முடிவுகளை எடுக்க முடியும் என்று தமிழ் முரசிடம் கூறினார் மாணவர் பிளெஸ்ஸிங் ஜேசுமுத்தையா பென்ராய் பிளெஸ்ஸிங், 17.
“எதிர்கால மாணவர்களை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், அங்கு விரைவுச்சாலை ஒன்றும் வரவிருக்கிறது. இது பயண நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும்,” என்றார் அவர்.
ஈராண்டுகளுக்குமேல் முக்கியப் பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தி கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியை இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார் கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியின் மேலாண்மைக் குழுத் தலைவர் பெர்னார்ட் டான்.
மேலும், தற்போதைய வளாகத்தின் குத்தகை காலாவதியாவதால் இந்த இடமாற்றம் அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

