பூனைகள், நாய்கள் ஆகியவை உயரத்திலிருந்து விழுவதாகக் கூறப்படுவது தொடர்பாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்தம் 61 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இத்தகவலை தேசிய பூங்காக் கழகம் புதன்கிழமை (அக்டோபர் 15) வெளியிட்டது.
இந்த 61 வழக்குகளில் 55 வழக்குகள் பூனைகளுடன் தொடர்புடையவை. எஞ்சிய வழக்குகள் நாய்களுடன் தொடர்புடையவை.
“இந்த 61 வழக்குகள் அனைத்தும், குறிப்பாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளுடன் தொடர்புடையவையாக இருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்,” என்று தேசிய பூங்காக் கழகத்தின் குழும இயக்குநர் ஜெசிக்கா குவோக் கூறினார்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதற்குப் பிறகு உயரத்திலிருந்து விழுந்த பூனைகள், நாய்கள் தொடர்பான எண்ணிக்கையை திருவாட்டி குவோக் வெளியிட்டார்.
விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டம் (பூனைகளுக்கும் நாய்களுக்கும் உரிமம் வழங்குதல் மற்றும் கட்டுப்பாடு) 2024ன்கீழ் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்கள் பூனைகள் மற்றும் நாய்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
செல்லப்பிராணிகள் வீடுகளில் அல்லது வேறு இடங்களில் உயரத்திலிருந்து விழும் அபாயம் ஏற்படாதபடி அவர்கள் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.