பொங்கல் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் விதமாக இரு பசுமாடுகள், ஒரு காளை மாடு, இரு கன்றுக்குட்டிகள் உள்ளிட்ட கால்நடைகள் மேளதாளம் முழங்க லிட்டில் இந்தியாவை வந்தடைந்தன.
வியாழக்கிழமை (ஜனவரி 9) மாலை 5.45 மணியளவில் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு எதிர்ப்புறத்திலுள்ள ‘பொலி’ (POLI) கூடாரத்திலிருந்து அவை சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டன.
தப்பாட்டக் கலைஞர்கள் ஆடியபடி முன்செல்ல, பின்னால் ஊழியர்கள் மாடுகளை அழைத்துச் சென்றனர். ‘தேக்கா பிளேஸ்’ கட்டடத்தின் வாயிலருகே கரகாட்டம், பொய்க்கால் குதிரை என நாட்டுப்புற நடனங்களுக்கு மத்தியில் மக்களின் பார்வைக்காக அவை சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
இசைக்கருவிகளின் சத்தம் அருகிலிருந்தோரின் கவனத்தை ஈர்க்கவே, சுற்றியுள்ளோர் மாடுகளின் பின்னால் படம்பிடித்தபடி ஊர்வலம் வந்தனர். ஊர்வலம் முடியும் முன்னர் சாலையில் சிலர் மாடுகளுக்கு மாலையிட்டு, பொட்டு வைத்து ஆரத்தி எடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
சிலர் உற்சாகமாக வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளையும் மாடுகளுக்கு வழங்கினர். பலரும் மாடுகளுடன் படமெடுப்பது, சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வது என உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
அங்குள்ள கடைகளில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் பலருக்கு இது குதூகலம் அளித்ததையும் காணமுடிந்தது.
இந்த ஊர்வல நிகழ்ச்சி இன, வயது வேறுபாடின்றி அனைவரிடமும் பொங்கல் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியதுடன், லிட்டில் இந்தியா வட்டாரத்தையே வண்ணமயமாக்கியது.
விக்னேஷ் பால் பண்ணையைச் சேர்ந்த அக்கால்நடைகள் லிம் சூ காங் பகுதியிலிருந்து காலை 11 மணிக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டன. அவை மூன்று வாகனங்கள் மூலம் பிற்பகல் 3 மணியளவில் லிட்டில் இந்தியாவை வந்தடைந்தன.
தொடர்புடைய செய்திகள்
பொங்கல் திருநாளை முன்னிட்டு, அடுத்த பத்து நாள்களுக்கு லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லிஷா) சார்பில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கடந்த 20ஆண்டுகளாக கால்நடைகள் வருகையும், அவை அவ்வட்டாரத்தில் தங்க வைக்கப்படுவதும் லிட்டில் இந்தியா வட்டாரப் பொங்கல் கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.
அவற்றை ஜனவரி 17ஆம் தேதிவரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். சிறுவர்களும், அடுத்த தலைமுறை இளையர்களும் கலாசாரக் கூறுகளைக் கண்டு, கேட்டு, தொட்டுணர ஏதுவாக கால்நடைகளின் வருகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“பண்பாட்டைப் பாதுகாப்பதிலும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதிலும் முனைப்பாக இருக்கிறோம்,” என்று சொன்ன ‘லிஷா’ பொது மேலாளர் ரவூஃப், குடும்பங்களும், சிங்கப்பூரின் பல இன மக்களும், சுற்றுப்பயணிகளும் தமிழரின் தனிப்பெரும் மரபைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக இது அமையுமென்றும் சொன்னார்.
“பால்பண்ணைகள் நவீனமயமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய சமூகத்தினர் கால்நடைகளுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தெரியப்படுத்தும் வாய்ப்பு இது”, என்று சொன்னார் விக்னேஷ் பால்பண்ணை உரிமையாளர் விக்னேஷ்.
“எனது பசுக்களை என் குடும்பம் போலவே பார்க்கிறேன். அவற்றைப் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அழைத்து வருவது பெருமையான தருணம்,” என்றும் அவர் கூறினார்.