வேலை தேடுவோருக்குப் பொருத்தமான, வீட்டிற்கு அருகிலேயே வேலை தேடித் தருவதில் உதவ சமூக மேம்பாட்டு மன்றங்கள் புதிய முன்னெடுப்பில் இறங்கி உள்ளன.
முன்னோடியாக இன்று (ஆகஸ்ட் 31) தென்மேற்கு வட்டாரத்தில் அறிமுகம் கண்டுள்ள ‘Jobs Nearby @CDC’ என்னும் அந்த முன்னெடுப்பு, அக்டோபர் மாதத்திற்குள் தீவு முழுவதும் தொடங்கப்பட்டுவிடும்.
வேலைக் காட்சிக்கு ஏற்பாடு செய்வதையும் தாண்டி இன்னும் சிறப்பான முயற்சிகளில் உதவ சமூக மேம்பாட்டு மன்றங்கள் கைகோத்துள்ளன.
“புதிய நடவடிக்கையின்படி, சமூக மன்றங்களில் வேலைத் தூதுவர்கள் நிறுத்தி வைக்கப்படுவர். வேலை நாடுவோருக்கு கூடுதலான நேரடி உதவிச் சேவை அங்கு வழங்கப்படும். பொருத்தமான வேலை கிடைக்கும் என்ற உறுதியில் காணப்படும் ஆகக் கடைசி வெற்றிடமும் நிரப்பப்படும்,” என்றார் தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங்.
ஹில்வியூ சமூக மன்றத்தில் இன்று நடத்தப்பட்ட வேலைக் காட்சியில் பங்கேற்றார் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி லோ.
“வேலைத் தூதுவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட உதவிகளில் ஈடுபடுவர்,” என்று அவர் கூறினார்.
அந்தச் சமூக மன்றத்தில் அறிமுகம் கண்ட புதிய நடவடிக்கையில் ஐந்து வேலைத் தூதுவர்கள் ஈடுபட்டனர். வேலை தேடுவோருக்கு உடனடி உதவிகளைச் செய்வதில் அவர்கள் தீவிரம் காட்டினர்.
தென்மேற்கு வட்டாரத்தில் உள்ள ஒரு சமூக நிலையத்திற்கு ஒருவர் என்ற வகையில் அந்த ஐவரும் சேவையில் ஈடுபடுவர்.
தொடர்புடைய செய்திகள்
வேலை தேடி வருவோரை வேலை தரத் தயாராக இருக்கும் நிறுவனங்களிடம் இணையம் வழியாக நேரடியாகத் தொடர்புகொள்வதற்கான முன்பதிவை தூதுவர்கள் பெற்றுத் தருவர்.
வேலைதேடுவோருக்கு திறன்மேம்பாடு தேவைப்பட்டால் அதற்குரிய அமைப்புகளுடன் அவரைத் தொடர்புபடுத்துவர்.
அவற்றுடன், வேலை தொடர்பான ஆலோசனை போன்ற சேவைகளை வழங்கும் இதர பங்காளிடம் வேலை தேடுவோரின் பெயர்களை அந்தத் தூதுவர்கள் பரிந்துரைப்பர்.
ஹில்வியூ சமூக மன்றத்தில் நடைபெற்ற வேலைக் காட்சியில் வேலை நாடி ஏறத்தாழ 20 பேர் வரிசை பிடித்து நின்றிருந்தனர். கிட்டத்தட்ட 100 குடியிருப்பாளர்கள் வேலைகேட்டுப் பதிவு செய்துள்ள வேளையில் மேலும் சிலர் பதிவு செய்யாமல் நேரடியாக வந்து வேலைக் காட்சியில் பங்கேற்றனர்.