2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலிருந்து ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்திலும் அவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
பிப்ரவரி 19ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் வரவு செலவுத் திட்டத்திற்குப் பிந்தைய வட்டமேசை மாநாட்டில், வருடாந்தர வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தர அம்சமாகப் பற்றுச்சீட்டுக்கள் இருக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, குறிப்பிட்ட சில ஆதரவுகளைச் சிங்கப்பூரர்களுக்கு வழங்கவே பற்றுச்சீட்டுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா பதிலளித்தார்.
பெருந்தொற்று காலத்தில் விநியோகம், தளவாடத் துறைகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பொருள்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்தன என்பதையும் அந்த விலையுயர்வு பயனீட்டாளர்களை எப்படி பாதித்தது குறித்தும் அவர் விவரித்தார்.
அதே நேரத்தில் 2022ஆம் ஆண்டு வெடித்த ரஷ்யா-உக்ரைன் போரால் உயர்ந்த பணவீக்கம், விநியோகச் சங்கிலிகளை மேலும் சீர்குலைத்தது என்றார் குமாரி இந்திராணி ராஜா.
“இதிலிருந்து சிங்கப்பூரர்களைப் பாதுகாக்க ஐந்து முறை நாணயக் கொள்கையை அரசாங்கம் கடுமையாக்கிய போதிலும், அவர்களின் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் திறனைப் பாதுகாக்க கூடுதல் உதவி வழங்க வேண்டியது அவசியம் என்பதையும் அது உணர்ந்தது,” என அவர் கூறினார்.
இவ்வாறே சிங்கப்பூரர்களுக்குக் கூடுதல் உதவி வழங்க ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது எனக் கூறிய அவர், மக்களுக்கு ரொக்கமாக வழங்கினால் அது பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால், அச்சிக்கலைத் தவிர்ப்பதற்காகவே பற்றுச்சீட்டு முறை பின்பற்றப்பட்டு வருவதாக சொன்னார் குமாரி இந்திராணி ராஜா.
“குறிப்பிட்ட உதவிகள் வழங்கவே ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவையேற்பட்டால் நாங்கள் உதவுவோம் என்பதே எங்கள் நிலைப்பாடு,” என அவர் தெரிவித்தார்.

