தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மே 13 முதல் $500 பெறுமானமுள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள்

2 mins read
a81f3deb-5bd5-4d65-b8a6-68f10336f87c
சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு நிதி அமைச்சும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் அறிவுறுத்தியுள்ளன. - படம்: சாவ்பாவ்

அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களும் மே 13ஆம் தேதியிலிருந்து $500 மதிக்கத்தக்க சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க இப்பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளில் பாதி அதாவது $250 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகளை பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்.

எஞ்சிய தொகையை இத்திட்டத்தில் பங்கெடுக்கும் உணவு அங்காடி நிலையக் கடைகளிலும் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைகளிலும் பயன்படுத்தலாம்.

இத்தகவலை நிதி அமைச்சும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.

பற்றுச்சீட்டுகள் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை செல்லுப்படியாகும்.

சிடிசி பற்றுச்சீட்டுகள் ஏழாவது முறையாக வழங்கப்படுகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது பிரதமர் லாரன்ஸ் வோங் இதுகுறித்து தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் $300 பெறுமானமுள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரர்கள் இடையே நிலவிய ஒருமைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையிலும் வர்த்தகங்களுக்கு ஆதரவு வழங்கவும் சிடிசி பற்றுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகும் அதிகரித்து வரும் விலைவாசியைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் இலக்குடன் சிடிசி பற்றுச்சீட்டுகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

ஆகக் கடைசியாக கடந்த ஜனவரி மாதத்தில் $300 பெறுமானமுள்ள சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

அவற்றையும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.

ஜனவரி மாதம் வழங்கப்பட்ட சிடிசி பற்றுச்சீட்டுகளை 1.33 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களில் ஏறத்தாழ 90 விழுக்காடு குடும்பங்கள் பதிவிறக்கம் செய்துவிட்டதாக தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளில் இதுவரை ஏறத்தாழ $300 மில்லியன் பெறுமானமுள்ள பற்றுசீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு நிதி அமைச்சும் சமூக மேம்பாட்டு மன்றங்களும் அறிவுறுத்தியுள்ளன.

பற்றுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளும்போது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் கேட்கப்படாது. பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள பணத்தை வேறு கணக்கிற்கு அனுப்பிவைக்கவோ அல்லது அதிகாரபூர்வமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யவோ கோரிக்கை விடுக்கப்படாது,” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகம் ஏற்பட்டால் 1799 எனும் எண் மூலம் ஸ்கேம்ஷீல்டு அவசர தொடர்பு எண்ணுடன் தொடர்புகொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்