சிங்கப்பூர்க் குடும்பங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதத்தில் 500 வெள்ளி மதிப்பிலான சிடிசி (CDC) பற்றுச்சீட்டுகளைப் பெறவுள்ளன.
அத்துடன், வரும் செப்டம்பரில் தகுதிபெறும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டச் சிறப்பு வழங்குதொகை, மேலும் 200 வெள்ளி உயர்த்தப்படும்.
2027 ஜனவரியில் வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த சிடிசி பற்றுச்சீட்டுகள் முன்கூட்டியே வழங்கப்படுவதாக நிதி மூத்த துணை அமைச்சரும் போக்குவரத்து தற்காலிக அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் வழங்கப்படவுள்ள சிடிசி பற்றுச்சீட்டுகளை அடுத்த ஆண்டு டிசம்பர் வரை பயன்படுத்தலாம்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நாடாளுமன்றத்தில் பேசிய திரு சியாவ், மத்திய கிழக்கு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு அரசாங்கம், செலவு அழுத்தங்களைச் சமாளிக்கக் கூடுதலாக ஏறத்தாழ 1 பில்லியன் வெள்ளி ஆதரவு வழங்குவதாகக் கூறினார்.
இவ்வாண்டு, 155 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஆகப் பெரிய வரவுசெலவுத் திட்டத்தைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்ததைத் திரு சியாவ் சுட்டினார்.
“ஈரான் பூசல் பற்றி எங்களால் (முன்னரே) அறிய முடியவில்லை. ஆனால், நிச்சயமின்மைகள் பலவற்றை எங்களால் உணர முடிந்ததால், கூடுதலான நம்பிக்கையையும் ஆதரவையும் இந்தத் திட்டத்தில் வழங்குவதற்கான தேவை இருந்தது,” என்று அவர் கூறினார்.
“எனவே, பிரதமர் வோங் குறிப்பிடத்தக்க, பரந்த அடிப்படையிலான ஆதரவுத் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இதில் வர்த்தக வருமான வரிக்கழிவு, சிடிசி பற்றுச்சீட்டு, வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.
“உணவு விலைகள், அத்தியாவசியப் பொருள், சேவைகளின் விலைகள் ஆகியவற்றின் ஏற்றத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுவரை, தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலையேற்றம் பரந்த அளவில் பொருள்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய கிழக்கில் நிச்சயமற்றதன்மை அதிகரித்து வருகையில், சிங்கப்பூரில் பணவீக்கம் குறித்த நம்பகமான, புதிய கணிப்புகளை வெளியிடுவதோ குடும்பங்கள்மீதான அதன் முழுமையான தாக்கத்தை மதிப்பிடுவதோ இது உகந்த நேரமன்று எனத் திரு சியாவ் குறிப்பிட்டார்.
“ஆனால், இந்தச் சூழல் சிங்கப்பூரர்களிடையே வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதை நாங்கள் அறிவோம்,” என்று அவர் கூறினார்.
தற்போதைய நெருக்கடி சிங்கப்பூர் சந்தித்த முதல் நெருக்கடி இல்லை என்றும் கடைசி நெருக்கடியாக இருக்கப்போவதும் இல்லை என்றும் திரு சியாவ் குறிப்பிட்டார்.
“நன்கு தயாராக உள்ள, போதுமான பாதுகாப்புகளை உருவாக்குகின்ற, பிரச்சினைகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ற தீர்வுகளுடன் விரைவாகச் செயல்படக்கூடிய அரசாங்கம் ஒன்று இருப்பதைச் சிங்கப்பூரர்கள் உறுதியாக நம்பலாம்,” என்றார் திரு சியாவ்.
ஜூலைக்கும் செப்டம்பருக்கும் இடையே குடும்பங்களுக்கான பொதுப் பயனீட்டுக் கட்டணம் வெகுவாக உயரப்போவதாக எதிர்பார்ப்புகள் நிலவுகையில், இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட யு-சேவ் (U-Save) விலைக்கழிவுகள் விலையேற்றத்தைச் சமாளிக்கக் கைகொடுக்கும் என்று நிதியமைச்சு, இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

