அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து உரிமையியல் (சிவில்) சட்ட உதவிக்கான வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்படும்போது குறைந்த வருமான பின்னணியைச் சேர்ந்த கூடுதலான சிங்கப்பூரர்கள் அதன்மூலம் பயனடையவிருக்கின்றனர்.
உரிமையியல் சட்ட உதவி, குற்றவியல் தற்காப்பு உதவி ஆகியவற்றுக்கான சொத்து உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று சட்ட அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 30) அறிக்கை வெளியிட்டது.
உரிமையியல் சட்ட உதவிக்குத் தகுதிபெறும் தனிநபர் குடும்ப வருமானம் $1,050லிருந்து $1,650க்கு உயர்த்தப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
தற்போதிருக்கும் குற்றவியல் தற்காப்பு உதவிக்கான தனிநபர் குடும்ப வருமானத்துக்கு ஈடாக அது உயர்த்தப்படுவதாக அது சொன்னது.
அந்த மாற்றங்கள் மூலம் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 1,000 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உரிமையியல் சட்ட உதவிகள் கோரப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை திருமண விவகாரங்கள், பணக் கோரிக்கைகள், உயில் சார்ந்த விவகாரங்களாக இருக்கின்றன.
கூடுதலாக, அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 60 வயதுக்குக்கீழ் உள்ள விண்ணப்பத்தாரர்களின் வங்கிச் சேமிப்புகள், மத்திய சேமநிதி அல்லாத முதலீட்டுகளுக்கான உச்சவரம்பு $10,000லிருந்து $12,000க்கு உயர்த்தப்படுகிறது. உரிமையியல் சட்ட உதவி, குற்றவியல் தற்காப்பு உதவி ஆகிய இரண்டுக்கும் அது பொருந்தும்.
60 வயதுக்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கான உச்சவரம்பு $40,000லிருந்து $42,000க்கு உயர்த்தப்படுகிறது.
உரிமையியல் சட்ட உதவி, குற்றவியல் தற்காப்பு உதவி ஆகியவற்றுக்கான தனிநபர் வருமான உச்சவரம்பு இதற்குமுன் 2022ஆம் ஆண்டும் 2024ஆம் ஆண்டு மாற்றப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் குடும்ப வருமானம் அதிகரித்ததால் உச்சவரம்பு மாற்றப்பட்டது.
தவிர்க்க முடியாத சூழலை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள், சட்ட, சமூக சேவைத் துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு சிறப்பு நிதித் தகுதி ஆய்வு அமைப்பால் தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்று சட்ட அமைச்சு தெரிவித்தது.
உரிமையியல் சட்ட உதவிக்கு விண்ணப்பிப்பது குறித்த கூடுதல் தகவல்களை சட்ட உதவிப் பிரிவின் இணையத்தளத்திலும் குற்றவியல் தற்காப்பு உதவி பற்றிய விவரங்களை தற்காப்பு அரசாங்க வழக்கறிஞர் அலுவலக இணையத்தளத்திலும் பெறலாம்.
