மத்திய விரைவுச்சாலை சுரங்கப்பாதைக்குள் வரம்புக்கு மீறிய உயரமுள்ள வாகனத்தை ஓட்டிய 55 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக, அந்தச் சுரங்கப்பாதையின் கேர்ன்ஹில் சர்க்கல் நுழைவாயில் சேதமடைந்தது.
அதனால், சுரங்கப்பாதைக்கு இட்டுச் செல்லும் இணைப்புச் சாலை (ஸ்லிப் ரோடு) மூடப்பட்டது.
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் லாரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நவம்பர் 8ஆம் தேதி பிற்பகலில் தகவல் கிடைத்ததாக காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் தெரிவித்தது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதும், 4.5 மீட்டர் உயரத்துக்கும் மேல் உள்ள கனரக வாகனத்தை காவல்துறை அதிகாரி அல்லது துணைக் காவல் அதிகாரியின் வழிகாட்டுதலின்றி, சட்டவிரோதமாக ஓட்டியதற்காக ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
அந்த விபத்தினால், சுரங்கப்பாதையின் மேற்கூரையில் உள்ள சில மின்சார, எந்திரச் சாதனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இருப்பினும், கட்டமைப்புக்குச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அது கூறியது.
சீரமைப்புப் பணிகளும் காவல்துறை விசாரணையும் தொடர்கின்றன.

