‘ஸ்குவேர் 2’ கடைத்தொகுதியில் உட்கூரைத் தகடு விழுந்தது; யாருக்கும் காயமில்லை

‘ஸ்குவேர் 2’ கடைத்தொகுதியில் உட்கூரைத் தகடு விழுந்தது; யாருக்கும் காயமில்லை

2 mins read
212beb4a-d722-41af-b2b2-0dfef9165c2b
நொவீனா ஸ்குவேர் 2 கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் உள்ள மின்படிக்கட்டுப் பகுதியில், பழுதுபார்க்கப்பட்ட உட்கூரையைக் காணமுடிகிறது. - படம்: சாவ்பாவ்

நொவீனாவில் உள்ள ‘ஸ்குவேர் 2’ கடைத்தொகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல் 11) காலை உட்கூரைத் தகடு ஒன்று விழுந்தது.

நீண்டகால ஈரப்பதத்தின் காரணமாக அது விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் கட்டடக் கட்டுமானத்திற்குப் பாதிப்பு இல்லை என்றும் கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது.

குளிர்சாதன இயந்திரத்தின் ஒரு பகுதியாக இருந்த உட்கூரைத் தகடு காலை 9 மணி அளவில் விழுந்ததாக ஊடகங்களுக்குப் பதிலளித்தபோது அது தெரிவித்தது.

கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகவும் இடிபாடுகள் மின்படிக்கட்டு ஒன்றின்மீது விழுந்ததாகவும் லியான்ஹ சாவ்பாவ் நாளிதழ் கூறியது.

நீண்டகால ஈரப்பதம், அண்மையில் குளிர்சாதனத்தின் வடிகால் குழாயில் ஏற்பட்ட கசிவு ஆகியவற்றின் காரணமாகக் குளிர்சாதன இயந்திரப் பகுதி கழன்றிருக்கலாம் என முதற்கட்டக் கண்டுபிடிப்புகள் காட்டுவதாக ஆணையம் தெரிவித்தது.

சோதனை நடத்திய ஆணையத்தின் பொறியாளர்கள், கடைத்தொகுதியின் கட்டுமானத்திற்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

குளிர்சாதன இயந்திரம் சீராக உள்ளது என்றும் அதனால், எவ்விதப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்றும் ஆணையம் கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதி மூடப்பட்டுள்ளது.

பராமரிப்பு ஆணை/உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது. அதன்படி, அதுபோன்ற குளிர்சாதன இயந்திரங்களைச் சோதித்துப் பார்த்து, தேவைப்பட்டால் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்குக் கட்டட உரிமையாளர் நிபுணத்துவப் பொறியாளர் ஒருவரை நியமிக்கவேண்டும்.

கடைத்தொகுதியின் செயல்பாடுகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட நிர்வாக முகவையான சவில்ஸ் புராபர்ட்டி மேனேஜ்மென்ட், இந்தச் சம்பவம் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றித் தடுப்புவேலிகள் போடப்பட்டன என்றும் தெரிவித்தது.

நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் டாங் சீ சார்ன், “சூழலை ஆராய்ந்து, சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தரப்பினருடனும் நாங்கள் தற்போது அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்