பண்டிகைக் காலங்களில் பல்லினக் கலாசாரங்கள் ஒன்றுபட்டு செயல்படுவது சிங்கப்பூர் போன்ற நாட்டிற்கு மிக முக்கியமானது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
அதிலும், தனியாக வசிக்கும் முதியோர் பிறருடன் சேர்ந்து ஒற்றுமையாகப் பண்டிகைகளைக் கொண்டாடுவது சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை நன்கு வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
செட்டியார்கோயில் குழுமம் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் இந்திராணி இவ்வாறு கூறினார்.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (19 ஜனவரி) பிற்பகல் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 முதியோர் கலந்துகொண்டு சீனப் புத்தாண்டுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நண்பகல் விருந்தைச் சுவைத்தனர்.
அவர்களில் பலர் சீன இனத்தவர்கள் என்பதால் அவர்களின் சுவைக்கேற்றவாறு சீனச் சமையல் கலை தழுவிய சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. குழுமத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் கொண்டாட்டத்தை வழிநடத்தி முதியோருக்கு உணவு வகைகளைப் பரிமாறினர்.
நிதி, தேசிய இரண்டாம் வளர்ச்சி அமைச்சருமான இந்திராணி ராஜா, சென்ற வெள்ளிக்கிழமை நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாட்டில் தான் தொடங்கி வைத்த ரயில் பசுமைப்பாதை குறித்த கண்காட்சி பற்றியும் பேசினார்.
தஞ்சோங் பகார் ரயில் கட்டமைப்பு செயல்பாட்டில் இருந்தபோது மலேசியாவிலிருந்து வருபவர்கள் அதிகம் வந்து சென்ற கோயிலாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் திகழ்ந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ரயில் பசுமைப்பாதை பாதுகாக்கப்பட வேண்டிய தளம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், செட்டியார் கோயில் குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவ்விடத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் பரிந்துரைக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் முதன்மையானதாகத் திகழும் ‘லோ ஹே’ சடங்கும் கொண்டாட்டத்தில் இடம்பெற்றது. இந்துக் கோயிலில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெற்ற போதிலும் முதியோர் அவ்வேறுபாட்டை உணராத வண்ணம் கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சீன மொழிப் பாடல்கள் சூழலைக் குதூகலமாக்க, முதியோரை கொண்டாட்ட உணர்வில் திளைக்க வைத்தனர் சிங்க நடனக் குழுவினர். வளைந்து நெளிந்து சிங்க நடனம் ஆடியவர்களை முதியோர் கண்டுகளித்தனர்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதி அடித்தளத் தலைவருமான அமைச்சர் இந்திராணி, வந்திருந்த முதியோர் ஒவ்வொவருக்கும் சிவப்பு அன்பளிப்பு உறைகளை வழங்கினார். அத்துடன், முதியோருக்கு அன்பளிப்புப் பைகளும் ஆரஞ்சுப் பழங்களும் வழங்கப்பட்டன.
“கடந்த ஆறாண்டுகளாக நாங்கள் சமூக உணர்வைப் பறைசாற்றும் வகையில் இதுபோன்ற பண்டிகைகளை ஏற்பாடு செய்துவருகிறோம். சீனப் புத்தாண்டுக்கு அப்பாற்பட்டு, நோன்புப் பெருநாள், தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டங்களையும் நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம். இந்துக் கோயிலில் சீனப் புத்தாண்டை கொண்டாடுவது சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது,” என்று செட்டியார் கோயில் குழுமத் தலைவர் ராமசாமி, 65, கூறினார்.
“கோயிலில் சீனப் புத்தாண்டு கொண்டாடுவது தனி மகிழ்ச்சிதான். எனக்கு இது புது அனுபவம். பிற முதியோருடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது எனக்கு உற்சாகம் அளிக்கிறது,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான திரு லீ, 65, சொன்னார்.
“நான் எட்டு வயதிலிருந்து செட்டியார் கோயில் குழுமத்தில் தொண்டூழியராக இருந்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு தொண்டூழியம் செய்வதால் என் நேரத்தை பயனாக வைத்துக்கொள்ள முடிகிறது,” என்றார் அபிராமி ரமேஷ், 18.