விழாக்காலத்தைச் சிறப்பாக்கும் குடும்பக் கொண்டாட்டங்கள், கடைத்தொகுதி நிகழ்ச்சிகள்
பண்டிகைக் காலத்தில் குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை மறக்க முடியாததாக மாற்றும் வகையில் தீவெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
‘எஸ்ஜி எனேபிள்’ அமைப்பின் ஏற்பாட்டில் ‘எனேபிளிங் லைவ்ஸ் விழா 2026’, நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் 70க்கும் மேற்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. அனைத்துத் திறன்களும் கொண்ட பாலர் பள்ளிச் சிறார்கள் இணைந்து விளையாடிக் கற்கும் ‘ஹூத்தான்’ (மலாய் மொழியில் ‘காடு’) எனும் பல்லுணர்வு நாடக அனுபவம் இதில் இடம்பெறுகிறது. இரு நாள்களிலும் தலா மூன்று இலவசக் காட்சிகள் நடைபெறும்; நேரடி அனுமதிச் சீட்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கிடைக்கும்.
லெங்கோக் பாருவில் உள்ள ‘எனேபிளிங் வில்லேஜில்’ தொடங்கிய இவ்விழாவின் ஆறாவது பதிப்பு, முதன்முறையாக அருகிலுள்ள டெல்டா விளையாட்டு நிலையத்திற்கும் விரிவடைகிறது.
ரெட்ஹில் ரயில் நிலையம், டெல்டா விளையாட்டு நிலையம் அல்லது ‘எனேபிளிங் வில்லேஜில்’ விழாவுக்கென்று வழங்கப்படும் சிறப்புக் கடவுச்சீட்டைப் பெற்று, நான்கு முத்திரைகளைச் சேகரிப்போர் அன்பளிப்புப் பெறலாம்.
தாய்லாந்தின் இனிப்பு நிறுவன அடையாளச் சின்னமான ‘பட்டர்பேர்’, முதன்முறையாக ஆர்ச்சர்ட் கேட்வே கடைத்தொகுதியில் இடம்பெறுகிறது. 6.5 மீட்டர் உயர மிட்டாய் இல்லம் இடம்பெறுகிறது. நவம்பர் 27ஆம் தேதி மாலை 6.30, இரவு 8.30 மணிக்கு சிறப்பு நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், ஜனவரி 3 ஆம் தேதி வரை சாமர்செட், ஜெம், பார்க்வே பரேட், பாய லேபார் குவார்ட்டர் ஆகிய லெண்ட்லீஸ் கடைத்தொகுதிகளில் ‘மோசியாக்’, ‘ஆவூ’, ‘நானா’ ஆகிய உள்ளூர்க் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
அமெரிக்கக் காப்பி நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்’ பூகிஸ் ஜங்ஷன், ஃபூனான், லாட் ஒன் உள்ளிட்ட 16 கேப்பிட்டாலேண்ட் கடைத்தொகுதிகளில் தனது ‘பியரிஸ்டா’ பொம்மைகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. ராஃபிள்ஸ் சிட்டிக்கு வெளியே எட்டு மீட்டர் உயரப் பொம்மையும் உள்ளது.
