மனங்களின் மணவிழா, இனங்களின் திருவிழா

மனங்களின் மணவிழா, இனங்களின் திருவிழா

படம்: புராக் பாலிக்

17 Feb 2026 - 5:00 am

2 mins read

அன்புள்ளங்கள் இன்புற ஒன்றிணையும் தர்ஷினி தேவி - வினோட் குமார் திருமண விழா, விறுவிறுப்பான சிங்க நடனத்தை வரவேற்றது.

மேளதாளத்துடனும் மணியோசையுடனும் மணமக்களுடன் ‘சிங்கங்கள்’ மண்டபத்திற்குள் நுழைந்து, விருந்தினர்களை வியப்பு கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

வளைந்து நெளிந்தாடி, துள்ளிக் குதித்தபின் அவை மணமக்களை வாழ்த்தின.

‘சிராங்கூன் கார்டன்ஸ்’ மனமகிழ் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இந்த மாறுபட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிங்க நடன ஏற்பாடு குறித்துத் தமக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை எனக் கூறிய சமூகப் பணியாளரான 34 வயது தர்ஷினி தேவதாஸ், அவற்றின் வருகை தமக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததாகக் குறிப்பிட்டார்.

“என் தாயார் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழர்கள் மட்டுமின்றி, சீனர்கள், மலாய்க்காரர்கள் எனப் பலரும் எங்கள் மணவிழாவில் விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் விதமாகச் சீன, மலாய்ப் பாடல்களும் ஒலிக்கப்பட்டன,” என்று திருவாட்டி தர்ஷினி கூறினார்.

தர்ஷினி தேவி தேவதாஸ், வினோட் குமார் ராஜேந்திரன் இணையர்.
தர்ஷினி தேவி தேவதாஸ், வினோட் குமார் ராஜேந்திரன் இணையர். - படம்: புராக் பாலிக்

2023ல் சந்தித்த இருவரும் காதலித்து மணம்புரிந்துள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த வர்த்தக உரிமையாளர் வினோட் குமார் ராஜேந்திரன், சிங்க நடனம் தங்கள் திருமண விழாவுக்குச் சிறப்பு சேர்த்ததாகக் கருதுகிறார்.

“திருவிழாக்களுக்கு இந்தச் சிங்க நடனக் கலைஞர்களை வரவழைப்பது வழக்கம். ஆனால், இந்தியத் திருமணங்களில் இதுபோன்று நடப்பது மிகவும் அரிது,” என்றார் அவர்.

பல இன, பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய தங்கள் திருமண நிகழ்ச்சியில், வேறுபாடுகளைக் கடந்த வாழ்த்துகளையும் அன்பையும் பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக 34 வயது திரு வினோட் கூறினார்.

இந்நாட்டின் இணக்கத்தையும் அரவணைப்பையும் தங்கள் திருமண விழா எடுத்துக்காட்டியதில் பெருமிதம் அடைவதாகத் திருவாட்டி தர்ஷினி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்