பொது இடங்களையும் மேடைகளையும் துடிப்புமிக்க விளையாட்டுத் தளங்களாக உருமாற்றும் நோக்கத்துடன் இவ்வாண்டின் சிங்கப்பூர் அனைத்துலகக் கலைவிழா தொடங்கியுள்ளது.
ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமமும் தேசியக் கலை மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அவ்விழா இம்மாதம் (மே) 15 ஆம் தேதி விக்டோரியா அரங்கில் தொடங்கியது. கலைவிழா இம்மாதம் 30 ஆம் தேதி வரை தொடரும்.
நாடகம், நடனம், இசை எனப் பல்வேறு கலைகளைக் கொண்டாடும் நோக்கத்துடன் விழா 1977லிருந்து நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு, ‘லெட்ஸ் பிளே’ என்ற கருப்பொருளையொட்டி கலைவிழா நடைபெறுகிறது. அது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொது இடங்களில் கலைகளைப் புகுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது.
விழா, கலைஞர்களின் திறமைகளை அங்கீகரிப்பது மட்டுமின்றிப் பொதுமக்களையும் கலையில் ஈடுபட ஊக்குவிக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் கலை அணிவகுப்பு ஒன்றும் இடம்பெற்றது. அதில் கலைஞர்கள் வண்ணமயமான ஆடைகளை அணிந்து பல கலைப் படைப்புகளை அரங்கேற்றியதோடு, பார்வையாளர்களையும் தங்களுடன் ஆடிப்பாட ஊக்குவித்தனர்.
கலைவிழாவின் புதிய இயக்குநர் சோங் ட்ஸு சியென், 2026 முதல் 2028 வரை மூன்று ஆண்டுகளுக்கான புதிய கலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். சிங்கப்பூரின் கலாசாரத்திற்கு மேலும் அழகூட்டுகின்ற கலைகளைச் சிறப்பிக்கும் வகையில் அந்த மூன்று ஆண்டுகளின் கலைவிழாக்கள் திட்டமிடப்படுகின்றன.
திட்டத்தின் முதல் ஆண்டில், காலம் கடந்த கலைகளைத் துடிப்பானவையாக உருமாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு, சிங்கப்பூர் அனைத்துலகக் கலைத் திருவிழாவின் 50வது ஆண்டு. அதில் கலைகளின் வரலாற்றையும் கலையில் ஈடுபட்ட முன்னோரையும் கொண்டாடுவதில் கவனம் செலுத்தப்படும். 2028ல் நவீன உலகிற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள பாரம்பரியக் கலைப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் கலைகளை அனுபவிக்கவும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளவும் சிங்கப்பூர் அனைத்துலகக் கலைவிழா ஐந்து தூண்களை அமைத்துள்ளது.
முதல் தூணான ‘திருவிழா மேடை’, உள்நாட்டு, வெளிநாட்டுப் படைப்புகளைப் பெரிய அளவில் மேடையேற்ற உதவும்.
‘திருவிழா கிராமம்’ என்பது பார்ப்போரை ஈடுபடுத்தும் வெளிப்புறக் கலைப் படைப்புகளைப் பிரதிபலிக்கும் சமூக ஒன்றுகூடல் தூண்.
படைத்தளத்தை ஒரு படை வடிவில் அமைக்கப்பட்ட தூண், குழந்தைகள், இளையர்கள், குடும்பத்தினர் என அனைவரும் கலைகளை அனுபவிக்க ஊக்குவிக்கிறது.
‘திருவிழா வீடு’ எனும் தூண், குடும்பங்களுக்காகப் பயிலரங்கு வடிவிலும் உரை வடிவிலும் கலை பற்றிய ஆழமான புரிதலை உருவாக்கும் தூண்.
கடைசித் தூணான ‘திருவிழா பின்னிரவு’, விளையாட்டுத்தனமாகக் கலைகளில் புதிய அனுபவம் பெறுவதை ஊக்குவிக்கும் இரவு நேர நிகழ்ச்சிகளை வழங்கும் தூண்.
அத்தூண்கள் கலைவிழாவைப் பார்க்கச் செல்வோருக்குப் படைப்புகளின்வழி சிறப்பான அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்யும் என்று நம்பப்படுகிறது.
அதிலும் பல நடவடிக்கைகள் இலவசம் என்பதால் கலைகளை அனைவரிடமும் கொண்டுசேர்க்க அது நல்ல முயற்சி என்றும் பலர் பாராட்டுகின்றனர்.

