போக்கிமோன் விளையாட்டு அட்டைத் தளம் என்ற போர்வையில் செயல்படும் சூதாட்ட இணையத்தளத்தைச் சிங்கப்பூரைச் சேர்ந்த பல சமூக ஊடகப் பிரபலங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறைந்தது 10 சமூக ஊடகப் பிரபலங்கள் மலேசியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தை விளம்பரப்படுத்தும் காணொளிகளைத் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதில் உள்ளூர் தளமான எஸ்ஜிஏஜி நிறுவனத்தின் முன்னாள் கலைஞர் ஒருவரும், ‘கிரைம்வாட்ச்’ நிகழ்ச்சியில் முன்பு நடித்த நடிகை ஒருவரும் அடங்குவர்.
சிங்கப்பூரின் தொலைதூரச் சூதாட்டச் சட்டங்களை மீறும் வகையில், மர்மப் பெட்டி சூதாட்ட உத்திகளைக் கொண்டுள்ள அந்த இணையத்தளத்தை மேலும் பலர் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், அதன் பெயரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிடவில்லை.
இந்தத் தளத்தில், உண்மையான அட்டைக்கு நிகரானது எனக் கூறப்படும் மெய்நிகர் விளையாட்டு அட்டையைக் கொண்ட மெய்நிகர் பொட்டலங்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. ‘ஒரிபாஸ்’ என அழைக்கப்படும் இவை, குறைந்த செலவில் அதிக மதிப்புள்ள அட்டைகளைப் பெறும் வாய்ப்பாகக் கூறி விற்பனையாளர்களால் உருவாக்கப்பட்டுச் சந்தைப்படுத்தப்படுகின்றன.
விற்பனையாளர்கள் பலதரப்பட்ட மதிப்புள்ள அட்டைகளைப் பொட்டலங்களாக மாற்றி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதில் அதிக மதிப்புள்ள அட்டை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த தகவல்களை உறுதிப்படுத்துவது கடினம் என்பதால், இறுதியில் வாங்குபவர்களுக்குத் தாங்கள் செலுத்திய பணத்தைவிட மிகக் குறைந்த மதிப்புடைய அட்டைகளே கிடைக்கின்றன.
சிங்கப்பூரின் விளையாட்டு அட்டைச் சமூகத்தில் ‘ஒரிபாஸ்’ அட்டைகளின் புழக்கம் பேரளவில் அதிகரித்துவருவது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை விற்பனை செய்வோர் சூதாட்டக் குற்றங்களைப் புரியக்கூடும் என உள்துறை அமைச்சு முன்னதாக எச்சரித்திருந்தது.
தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசிய நிறுவனம், சிங்கப்பூர்ப் பயனர்களுக்கெனச் சிறப்பு இணையப்பக்கம் ஒன்றை அமைத்துள்ளது. அங்கு ஒரு மெய்நிகர் ‘ஒரிபாஸ்’ பொட்டலம் 100 முதல் 1,200 வரையிலான புள்ளிகளுக்கு விற்கப்படுகிறது; ஒரு புள்ளியின் மதிப்பு $1. மேலும், இந்தத் தளம் ‘பேநவ்’ மூலமாகவும் கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறது.
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும், சிங்கப்பூரைச் சேர்ந்த அதன் முதன்மைப் பயனர் ஒருவர் 1,970 ‘ஒரிபாஸ்’ பொட்டலங்களை வாங்க 220,000க்கும் மேற்பட்ட புள்ளிகளைச் செலவிட்டுள்ளதை அந்த இணையத்தளம் காட்டுகிறது. அத்துடன், சூதாடுபவர்கள் தாங்கள் வென்ற பரிசுகளை உடனடியாக அதே தளத்தில் மீண்டும் விற்றுப் புள்ளிகளாக மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. சூதாட்டத் தூண்டுதலைத் தடுக்கும் வகையில், கேளிக்கை மையங்கள், கேளிக்கை விழாக்களில் இத்தகைய நடைமுறைக்குச் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளம், இதில் தொடர்புடைய சமூக ஊடகப் பிரபலங்கள் தொடர்பான விவகாரத்தைக் கண்காணித்து வருவதாகவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
