ஹோர்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் கப்பல்கள்மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஹோர்முஸ் நீரிணையில் சிங்கப்பூர் கப்பல்கள்மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

படம்: ராய்ட்டர்ஸ்

15 Oct 2026 - 12:00 pm

1 mins read

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட இரு சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே சென்றபோது அவற்றின்மீது அடையாளம் தெரியாத ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) தாக்குதலுக்கு உள்ளான ‘ஜிஎஃப்எஸ் பிரைடு’ கப்பல் தீப்பற்றியதைத் தொடர்ந்து கடலில் மூழ்கியது. அதில் இருந்த ஊழியர்கள் 21 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ‘ஜிஎஃப்எஸ் கிசெல்லே’ கப்பலும் சேதமடைந்தது. அதில் இருந்த ஊழியர்கள் 22 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்.

அந்த இரு கொள்கலன் கப்பல்களிலும் சிங்கப்பூரர்கள் எவரும் பயணம் செய்யவில்லை என்றும் கப்பலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கப்பல்களின் நிர்வாக நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் நிலைமையைக் கூர்ந்து கண்காணித்து வருவதாகவும் அது குறிப்பிட்டது.

வர்த்தகக் கப்பல்கள்மீதான தாக்குதல்கள் காரணமற்றவை, நியாயமற்றவை, அனைத்துலகச் சட்ட மீறல் எனச் சாடிய ஆணையம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கடல்சார் சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு கப்பல்கள், கடலோடிகளின் பாதுகாப்பை அனைவரும் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
கப்பல்ஹோர்முஸ் நீரிணைகண்டனம்